ஸ்ரீநகர்: சுமார் 90 நாட்களுக்குப் பிறகு காஷ்மீரில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் அகற்றப்பட்டுள்ளதாகப் பாதுகாப்புப் படைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் அங்கு இயல்பு வாழ்க்கை முழுமையாக திரும்பவில்லை என சில செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
காஷ்மீரின் அனைத்துப் பகுதிகளிலும் கட்டுப்பாடுகள் அகற்றப்பட்டுள்ளதால் அங்கு இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது என காவல்துறை கூறியுள்ளது.
அதேசமயம் பதற்றமான பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிகிறது.
கட்டுப்பாடுகள் அகற்றப்பட்ட நிலையில் காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் தனியார் வாகனங்கள் நகர சாலைகளில் ஓடுவது சற்றே அதிகரித்துள்ளதாக இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இயல்பு வாழ்க்கைத் திரும்பியுள்ளதாகக் கூறப்பட்டாலும் பல்வேறு பகுதிகளில் கடைகளும் சந்தைகளும் நண்பகல் வேளையிலேயே மூடப்பட்டு விடுவதாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நௌவ் ஹட்டா பகுதியில் உள்ள வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஜாமியா மசூதியில் 13ஆவது வாரமாகத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை தொழுகைகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்றும், குறிப்பிட்ட சில மசூதிகளில் மாலை தொழுகைக்கு அனுமதி மறுக்கப்பட்டது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இந்தியாவுக்கு அமெரிக்கா தனது முழு ஆதரவை அளித்துள்ளது என அமெரிக்காவுக்கான இந்திய தூதர் ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்லா தெரிவித்துள்ளார். இந்தியா மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு அமெரிக்க நாடாளுமன்ற எம்பிக்கள் தங்களது முழு ஆதரவை தெரிவித்துள்ளனர் என்றும் அவர் மேலும் கூறி உள்ளார்.

