புதுடெல்லி: வாட்ஸ் அப் தகவல்கள் உளவு பார்க்கப்பட்டதாகத் தகவல் வெளியானதை அடுத்து மத்திய அரசைச் சாடியுள்ளார் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி.
இத்தகவல் உண்மை யாக இருந்தால் அது மிகப்பெரிய மனித உரிமை மீறலாகக் கருதப்பட வேண்டும் என்று அவர் டுவிட்டர் பதிவு ஒன்றில் கூறியுள்ளார்.
"வழக்கறிஞர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், அரசியல்வாதிகள், ஊடக வியலாளர்கள் உள்ளிட்ட பலரது வாட்ஸ்அப் தகவல்களை உளவு பார்க்க இஸ்ரேலைச் சேர்ந்த நிறுவனத்துடன் இணைந்து இந்திய அரசு செயல்பட்டிருந்தால் அது தேசிய பாதுகாப்புக்கு எதிரானது," என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் மத்திய அரசின் பதிலை எதிர்பார்த்து தாம் காத்திருப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
இதற்கிடையே வாட்ஸ் அப் தகவல்கள் உளவு பார்க்கப்பட்டது குறித்து அந்நிறுவனம் நவம்பர் 4ஆம் தேதிக்குள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை கெடு விதித்துள்ளது.
இந்தியாவில் 40 கோடி பேர் வாட்ஸ் அப் பயன்படுத்துவதாகப் புள்ளி விவரங்கள் தெரி விக்கின்றன. இந்நிலையில் வாட்ஸ்அப் தகவல்கள் உளவு பார்க்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

