உத்தரப் பிரதேசத்தில் உளவுத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு

உத்தரப் பிரதேசத்தில் உளவுத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு

2 mins read

லக்னோ: அயோத்தி ராமர் கோவில், பாபர் மசூதி தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் விரைவில் தீர்ப்பளிக்க உள்ள நிலையில் உத்தரப் பிரதேசத்தில் உளவுத்துறையின் கண்காணிப்பு தீவிரமடைந்துள்ளது.

அயோத்தியில் உள்ள நிலத்துக்கு இரு தரப்பினர் உரிமை கொண்டாடி வருகின்றனர். இது தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்து வந்தது. மிக விரைவில் இந்த வழக்கில் தீர்ப்பையும் அறிவிக்க உள்ளது.

தீர்ப்புக்குப் பிறகு கலவரம் மூள வாய்ப்புள்ளதாகவும், வன்முறை வெடிக்கலாம் என்றும் கருதப்படுகிறது. இதையடுத்து உச்சபட்ச விழிப்பு நிலையில் இருக்குமாறு உத்தரப் பிரதேச அரசுக்கு மத்திய உளவுத்துறை குறிப்பு அனுப்பி உள்ளது.

இதையடுத்து உத்தரப் பிரதேசத்தின் தெய்வீக நகரங்கள் எனக் குறிப்பிடப்படும் அயோத்தி, காசி, வாரணாசி, அலகாபாத், மதுராவில் மத்திய, மாநில உளவுத் துறை அதிகாரிகள் முகாமிட்டுள்ளனர். கடந்த 3 தினங்களாக அவர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

உளவுத் துறை அதிகாரிகள் அளிக்கும் தகவல்களின் பேரில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட உத்தரப் பிரதேச அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதற்கிடையே மத்திய உள்துறை அமைச்சு சார்பில் மத நல்லிணக்க அமைப்புகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட உள்ளது.

இந்நிலையில் அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் எத்தகைய தீர்ப்பை அளித்தாலும் அதை வரவேற்றுச் செயல்படுத்த இருப்பதாக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

அயோத்திக்கு என தனித்துவமான அடையாளத்தை அளிக்க மாநில அரசு விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

"கடந்த இரண்டரை ஆண்டுகளாக அயோத்தியில் பல மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளோம். வளர்ச்சித் திட்டங்களையும் செயல்

படுத்துகிறோம்.

"ராமஜென்ம பூமி விவகாரத்தில் நம்பிக்கை இழந்த நேரத்தில் தினந்தோறும் விசாரணை நடத்தி அந்த நம்பிக்கையை மீண்டும் துளிர்க்கச் செய்த உச்ச நீதிமன்றத்துக்கு நன்றி," என முதல்வர் யோகி ஆதித்யநாத் மேலும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே அயோத்தி வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும் பட்சத்தில், எந்தவிதமான கொண் டாட்ட நிகழ்வுகளுக்கும் ஏற்பாடு செய்யப் போவதில்லை என சில இந்து அமைப்புகள் தெரிவித்துள்ளன.