மும்பை: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களை மிரட்டும் வகையில் பாஜக நடந்துகொள்வதாக சிவசேனா புகார் எழுப்பி உள்ளது.
கூட்டணி ஆட்சியில் தங்களுக்குச் சமமான பங்கு வேண்டும் என்பதே சிவசேனாவின் கோரிக்கை என அக்கட்சியின் அதிகாரபூர்வ பத்திரிகையான 'சாம்னா'வில் வெளியாகியுள்ள கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் அண்மையில் நடைபெற்றது. இதில் சிவசேனாவும் பாஜகவும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. இந்நிலையில் சிவசேனாவின் ஆதரவின்றி பாஜக ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து ஆட்சியில் ஐம்பது விழுக்காடு பங்கு வேண்டும் என சிவசேனா வலியுறுத்தி உள்ளது. இதை ஏற்க பாஜக மறுத்துவிட்டதால் இரு கட்சிகளுக்கும் இடையே உரசல் நிலவி வருகிறது.
இந்நிலையில், "அதிபர் ஆட்சி வரும் என்று கூறுவது ஒருவகை மிரட்டல். அப்படியானால் அதிபர் உங்கள் சட்டைப் பையில் இருக்கிறாரா," என்று கட்சிப் பத்திரிகையான 'சாம்னா' மூலம் சிவசேனா தலைமை தனது கோபத்தை வெளிப்படுத்தி உள்ளது.

