புதிதாகப் பிறந்த பெண்குழந்தையை மண்ணுக்குள் புதைக்க முற்பட்ட அதன் சொந்த குடும்பத்தினரை போலிசார் கையும் களவுமாகப் பிடித்துள்ளனர். ஆந்திர பிரதேச மாநிலத்தின் ஹைதராபாத் நகரில் நடந்த இந்தச் சம்பவத்தைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
கம்பளங்களால் போர்த்தப்பட்ட குழந்தையைக் கரங்களில் சுமந்துகொண்டிருந்த ஓர் ஆடவரையும் மண்ணைத் தனது கைகளால் அவசர அவசரமாகத் தோண்டிக் கொண்டிருந்த மற்றோர் ஆடவரையும் போலிசார் அணுகியதை அந்தக் காணொளி காட்டியது. அந்தக் குழந்தை இறந்துவிட்டதாக ஆடவர்களில் ஒருவர் போலிசாரிடம் பொய்யுரைத்தார். ஆனால் கம்பளத்திற்குள் குழந்தை திடீரென அசைந்தபோது அதனைக் கண்ட போலிசார் உண்மையை உணர்ந்து அவர்களைக் கைது செய்தனர்.
அந்நேரத்தில் குழந்தையைக் கையில் பிடித்துக்கொண்டிருந்தவர் அவரது சொந்த தாத்தா என தெரிய வந்தது. தனது மகளுக்குப் பிறந்தது பெண் குழந்தை என அறிந்தபோது தானும் சக குடும்பத்தினரும் அந்தக் குழந்தையைக் கைவிட முடிவு செய்ததாக அவர் கூறினார். அவருடன் பிடிபட்டவரும் குழந்தையின் உறவினர்.
குழந்தை இப்போது மருத்துவமனையில் பாதுகாப்பாக இருப்பதாக இந்திய ஊடகங்கள் கூறுகின்றன.

