அண்மைய ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு டெல்லியில் காற்று மாசு மிகவும் அபாயகரமான அளவை எட்டியுள்ளது. விமானப் பயணங்கள் மாற்றிவிடப்படுவதும் தாமதமாவதும் ஒரு புறம் இருக்க, மறுபுறம் இந்த நெருக்கடியைச் சமாளிக்கத் தவறியதைத் தொடர்ந்து அரசியல்வாதிகள் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
குளிர்காலம் வரும்போதெல்லாம் 20 மில்லியன் மக்கள்தொகை கொண்டுள்ள இந்தியாவின் தலைநகரான புதுடெல்லி, நச்சு புகைமூட்டத்தால் பாதிப்புறும்.
உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கும் பாதுகாப்பான காற்றுக் குறியீடு 25 என்றிருக்க, நேற்று காலை டெல்லியின் சில இடங்களில் காற்று மாசு மிகவும் அபாயக் கட்டமான 900 புள்ளிகளைத் தொட்டதாக டெல்லியின் அமெரிக்க தூதரகம் தெரிவித்தது.
இதன் தொடர்பில் "காற்றுத் தூய்மைக்கேடு பொறுத்துக்கொள்ள முடியாத அளவை எட்டியுள்ளது," என்று டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் நேற்று டுவிட் செய்திருந்தார். இந்த நிலைமையைச் சமாளிக்க முடியாமல் மக்கள் கண் வலி, தொண்டை வலி எனத் திணறும் நிலை உருவாகியுள்ளது. தங்களைப் பாதுகாத்துக்கொள்ள முகக்கவசமும் அணிகின்றனர். இதற்கிடையே இந்த மாசு கலந்த புகைமூட்ட நிலைக்கு யார் காரணம் என்று மாநில, மத்திய அரசியல்வாதிகள் ஒருவரையொருவர் சாடி வருகின்றனர்.

