ஹர்யானா மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுமி உயிரிழந்ததாகத் தகவல் வெளிவந்துள்ளது. மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுஜித் என்ற குழந்தையின் மரணத்தை அடுத்து இந்தச் சம்பவம் நேர்ந்துள்ளது.
நேற்று மாலை கர்னால் மாவட்டத்திலுள்ள ஹர்சிங்புரா என்ற கிராமத்தில் அந்தச் சிறுமி தனது வீட்டுக்கு அருகே விளையாடிக்கொண்டிருந்தபோது, மூடப்படாதிருந்த அந்த ஆழ்துளை கிணற்றுக்குள் தவறுதலாக விழுந்தார்.
சற்று நேரத்திற்குப் பிறகு அந்தச் சிறுமியைக் காணோமே எனத் தேட ஆரம்பித்த குடும்பத்தினர், அவள் கிணற்றுக்குள் விழுந்ததைப் பிற்பாடு அறிந்துகொண்டனர்.
சம்பவ விவரங்கள் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்திற்கும் போலிசாருக்கும் உடனே தெரிவிக்கப்பட்டன. அந்த 50 அடி ஆழமான கிணற்றிலிருந்து சிறுமியைக் காப்பாற்ற மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆயினும் அந்தச் சிறுமி இறந்துவிட்ட நிலையில் கிணற்றிலிருந்து வெளியே எடுக்கப்பட்டதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் உறுதி செய்துள்ளது.
தமிழகத்தின் மணப்பாறைக்கு அருகே நடுக்காட்டுப்பட்டி என்ற கிராமத்தில், இரண்டு வயது சிறுவன் சுஜித் அண்மையில் ஆள்துளை கிணற்றில் விழுந்து மாண்ட சம்பவம் மக்களிடையே துயரத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுபோன்ற ஒரு சம்பவம் மீண்டும் நடந்துள்ளது.

