மும்பை: பணம் பாதாளம் வரை பாயும் என்று கூறப்பட்டாலும் ஒரு தொழிலாளியின் நேர்மையிடம் பணம் தோற்றுவிட்டது. இத்தகைய ஒரு சம்பவம் மகாராஷ்டிரா மாநிலம் சத்தாரா என்ற பகுதியில் நிகழ்ந்தது. அந்தப் பகுதியைச் சேர்ந்த தனாஜி ஜாக்டலே, 54, என்பவர் சென்ற மாதம் 27ஆம் தேதி தீபாவளியன்று பிங்காலி என்ற தன்னுடைய சொந்த ஊருக்குச் செல்ல தஹிவாடி என்ற பகுதியில் பேருந்துக்காகக் காத்திருந்தார்.
ஆனால் அவரிடம் ரூ. 3 மட்டுமே இருந்தது. மேலும் 7 ரூபாய் தேவைப்பட்டது. இந்த நிலையில், ரூ.40,000 பணம் இருந்த ஒரு பையை அவர் கீழே கிடந்து எடுத்தார். என்றாலும் அந்தப் பையைத் தேடி பைத்தியம் பிடித்தது போல் அலைந்த ஒரு நபரை அடையாளம் கண்டு அவரிடம் அந்தப் பணத்தை அப்படியே அவர் ஒப்படைத்து விட்டார்.
பையைத் தவறவிட்டவர் தனாஜிக்கு ரூ. 1,000 வெகுமதி அளிக்க முன்வந்தார். ஆனால் தனக்கு ரூ. 7 போதும் என்று தனாஜி கூறிவிட்டார். இந்தச் செய்தியை அறிந்ததும் பாஜக எம்எல்ஏ ஷிவேந்திரராஜே போஸாலேயும் இதர பல நிறுவனங்களும் தனிப்பட்டவர்களும் தனாஜியை பெரிதும் பாராட்டி அவரின் நேர்மையைப் புகழ்ந்தனர்.
அமெரிக்க வாழ் இந்தியரான ராகுல் பார்கே என்பவர் தனாஜிக்கு ரூ. 5 லட்சம் வழங்க முன்வந்தார். அதையும் இதர பலர் தனக்குக் கொடுக்க வந்த ரொக்க வெகுமதிகளையும் வாங்க தனாஜி திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.
"யாருடைய பணத்தையும் எடுத்துக்கொண்டு யாரும் நிம்மதியாக வாழ்ந்துவிட முடியாது. நான் கூற வருவது எல்லாம் மக்கள் நேர்மையுடன் வாழ வேண்டும் என்ற கருத்தைதான்," என்றார் தனாஜி

