நண்பர்களுக்கிடையே சவால்; உயிரைப் பறித்த 41வது முட்டை

நண்பர்களுக்கிடையே சவால்; உயிரைப் பறித்த 41வது முட்டை

2 mins read
349a0cfb-eb84-46aa-a49a-3462c9ddce21
40 முட்டைகளை அடுத்தடுத்து சாப்பிட்டு நண்பரை மிரள வைத்தார் சுபாஷ். படம்: ஊடகம் -

"ஒரே நேரத்தில் 50 முட்டைகளைச் சாப்பிட முடியுமா?" என்ற சவாலுக்கு, ரூ.2,000 பணயத் தொகையாக நிர்ணயிக்கப்பட்டது.

சாப்பாட்டுக் கடைக்குச் சென்ற இரண்டு நண்பர்களுக்குள் விளையாட்டாக மேற்கொள்ளப்பட்ட இந்த சவால், ஓர் உயிரைப் பறித்த சோகம் நிகழ்ந்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் ஜான்பூர் மாவட்டத்தில் உள்ள பிபிகஞ்ச் மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த 42 வயதான சுபாஷ் யாதவ் என்பவர் சவாலை ஏற்றுக்கொண்டார்.

அவித்த 50 முட்டைகளை கடைக்காரர் கொண்டு வந்து வைத்ததும் ஒவ்வொன்றாக சாப்பிட ஆரம்பித்தார் சுபாஷ்.

40 முட்டைகளை அடுத்தடுத்து சாப்பிட்டு நண்பரை மிரள வைத்தார் சுபாஷ்.

ஆனால் 41வது முட்டையை சாப்பிட ஆரம்பித்த போதுதான் சிக்கல் உருவானது. 41வது முட்டையை விழுங்கிய அடுத்த வினாடி அவர் திடீரென மயங்கி விழுந்தார்.

அவரை எழுப்ப நடந்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார் சுபாஷ். ஆனால் அங்கிருந்த மருத்துவர்கள் அவரை ஜான்பூரில் உள்ள சஞ்சய்காந்தி மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி தெரிவித்தனர்.

அங்கு தீவிரசிகிச்சை அளித்தும் பலனின்றி உயிரிழந்தார் சுபாஷ்.

"முட்டையை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டதால் அவை உணவு குழாயை அடைத்ததோடு சுவாசத்தையும் தடுத்து விட்டது. இதனால் அவர் சுவாசம் கிடைக்காமல் மயங்கி விழுந்து இறந்துள்ளார்" என்று மருத்துவர்கள் குறிப்பிட்டனர்.

சுபாஷுக்கு திருமணமாகி பிள்ளைகள் உள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சுபாஷ் குடும்பத்தினர் போலிசில் புகார் அளிக்காததால் யார் மீதும் நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்று போலிஸ் தரப்பில் கூறப்பட்டது.