அவமதிக்கப்பட்ட திருவள்ளுவர் சிலைக்கு காவித்துண்டு, ருத்ராட்ச மாலை

தஞ்சாவூர் பிள்ளையார்பட்டியில் சில நாட்களுக்கு முன்பு சாணம் பூசப்பட்டு அவமதிக்கப்பட்ட திருவள்ளுவர் சிலைக்கு இப்போது காவித்துண்டும் ருத்ராட்ச மாலையும் அணிவிக்கப்பட்டுள்ளன.

சிலையின் அவமதிப்புக்கு அடுத்து அந்த கிராமத்து மக்கள், இதற்குக் காரணமாக இருந்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனக் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் இந்து சமயச் சின்னங்களை அதே சிலைக்கு அணிவித்துள்ளார். இதனை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளிவந்துள்ளது. பழம்பெரும் பேரரசர் ராஜராஜ சோழனின் சதய விழாவுக்காக தஞ்சாவூருக்குச் சென்றிருந்த அர்ஜுன் சம்பத், திடீரென பிள்ளையார்பட்டிக்குச் சென்று இவ்வாறு செய்திருக்கிறார்.

திருவள்ளுவரை சைவ சமயத் தலைவராகக் கருதும் பலரில் தாமும் ஒருவர் என அர்ஜுன் சம்பத் கூறுகிறார். எனினும் திருவள்ளுவர் சமயசார்பற்றவர் என நம்பும் சிலருக்கு இந்தச் சம்பவம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

காவி உடை, திருநீறு ஆகியவற்றுடன் காணப்பட்ட திருவள்ளுவர் படத்தை தமிழக பாஜக சமூக ஊடகங்களில் அண்மையில் வெளியிட்டதை அடுத்து  இணையத்தில் இந்தச் சர்ச்சை உருவெடுத்தது.