'ரூ.1000 கோடி தந்தார் எடியூரப்பா'

'ரூ.1000 கோடி தந்தார் எடியூரப்பா'

2 mins read
a04e46f4-d227-47fd-a3e5-bc84f6012176
-

மாண்டியா: தொகுதி மேம்பாட்டிற்காக எடியூரப்பா ரூ. 1,000 கோடி கொடுத்ததாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட கிருஷ்ணராஜ் பேட்டை தொகுதி எம்எல்ஏ நாராயண கவுடா கூறியுள்ளார்.

"குமாரசாமி ஆட்சி கவிழ்வதற்குமுன் காலை 5 மணிக்கு என் வீட்டிற்கு வந்த சிலர், என்னை எடியூரப்பா இல்லத்திற்கு அழைத்து சென்றனர். அவர் மீண்டும் முதல்வர் ஆவதற்காக தன்னை ஆதரிக் கும்படி எடியூரப்பா என்னிடம் கூறினார். அப்படியானால், என் தொகுதி மேம்பாட்டிற்கு ரூ.700 கோடி ஒதுக்குங்கள் எனக் கேட்டேன். அவர், ரூ. 1,000 கோடி தருவதாக கூறினார். அவ்வளவு பெரிய மனிதரை நான் ஆதரித்தேன். ஆனால், தகுதிநீக்க எம்எல்ஏக்களுடன் தங்களுக்குத் தொடர்பில்லை என அவர் கூறிவருகிறார்," என்று நாராயண கவுடா கூறினார்.

ஏற்கெனவே காணொளி விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் நெருக்கடி கொடுத்துவரும் வேளையில் எம்எல்ஏவின் இந்த பேச்சு ஆளும்கட்சிக்கு மேலும் நெருக்கடியாகியுள்ளது.

17 எம்எல்ஏக்கள் பதவி விலகியதால் கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம்-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. இதையடுத்து 17 எம்எல்ஏக்களையும் கர்நாடக சபாநாயகராக இருந்த ரமேஷ் குமார் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். 17 தொகுதிக்கும் தேர்தலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் எடியூரப்பாவுக்கு ஆதரவாக பதவி விலகி தகுதி நீக்கம் செய்யப்பட்ட கிருஷ்ணராஜ் பேட்டை எம்எல்ஏ நாராயண கௌடா எடியூரப்பாவுக்கு ஆதரவு அளித்த காரணம் குறித்தும், 1000 கோடி ரூபாய் எடியூரப்பா தொகுதி வளர்ச்சிக்கு அளித்ததாகவும் ஆதரவாளர்களிடம் கூறியுள்ளார். தன்னைப் போலவே முன்னாள் மதசார்பற்ற ஜனதா தள எம்எல்ஏ ஒருவரும், முதல்வர் எடியூரப்பா தொகுதி வளர்ச்சி நிதி அளித்ததற்காக ஆதரவு அளித்ததாகவும் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாகவும் கூறியிருந்தார் என நாராயண கவுடா தெரிவித்தார்.