இந்தியாவில் எனக்கு நியாயம் கிடைக்காது. என்னை இந்தியாவுக்கு அனுப்பினால் நான் உயிரை மாய்த்துக்கொள்வேன் என்று நீரவ் மோடி லண்டன் நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ12,700 கோடி சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் செய்ததாக குஜராத் வைர வியாபாரி நீரவ் மோடியின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. லண்டனில் கைது செய்யப்பட்ட நீரவ் மோடியிடம் அங்குள்ள நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறுகிறது. தற்போது நீரவ் லண்டன் வாண்ட்ஸ்வொர்த் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.
சிறையில் கைதிகள் மூன்று முறை தன்னை மிகவும் மோசமாகத் தாக்கியதாகக் குறிப்பிட்டு தன்னைப் பிணையில் விடுவிக்க வேண்டுமென ஐந்தாவது முறையாக லண்டன் நீதிமன்றத்தில் நீரவ் மோடி கோரியிருந்தார். நான்கு முறை அவரது பிணை மனுவை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
ஐந்தாவது மனு மீதான விசாரணை நேற்று நடந்தது. அப்போது, "கைதிகள் என்னுடைய அறைக்குள் வந்து இதுவரை மூன்று முறை மோசமாக தாக்கி இருக்கிறார்கள். எனக்கு உரிய பாதுகாப்பு வேண்டும். என்னால் இந்தியாவிற்குச் செல்ல முடியாது. இந்தியாவில் நியாயமான முறையில் விசாரணை நடக்காது. என்னை இந்தியாவுக்கு அனுப்பினால் நான் உயிரை மாய்த்துக்கொள்வேன்," என்று நீரவ் மோடி கூறியுள்ளார்.
இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை அடுத்த மாதம் நான்காம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


