பணம், நகைக்காக பாட்டி உட்பட 10 பேர் கொலை; 'சயனைடு சிவா'வின் கைவரிசை

பணம், நகைக்காக பாட்டி உட்பட 10 பேர் கொலை; 'சயனைடு சிவா'வின் கைவரிசை

1 mins read
5d8fd20c-4c58-48ce-8ccd-3355aba707d4
சிவாவுக்கு சயனைடு அளித்து உதவிய ஷேக் அமீனுல்லா பாபுவையும் போலிசார் கைது செய்துள்ளனர். படம்: ஊடகம் -

கேரளாவில் உணவில் 'சயனைடு' விஷம் கலந்து உறவினர்கள் அறுவரைக் கொன்ற ஜோலி எனும் பெண்ணைப்போல ஆந்திரப் பிரதேசத்தில் 'சயனைடு' விஷம் வைத்து 10 பேரை சிவா என்பவர் கொலை செய்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மேற்கு கோதாவரி, கிழக்கு கோதாவரி, கிருஷ்ணா மாவட்டங்களில் இந்தக் கொலைகள் நிகழ்ந்ததாகக் கூறப்பட்டது.

தமது சொந்த பாட்டி, அண்ணி உட்பட மூன்று பெண்கள் 20 மாதங்களுக்குள் கொலையுண்ட 10 பேரில் அடக்கம்.

பூசைகள் செய்து பணம், நகை போன்றவற்றை பெருக்கிக் கொடுப்பதாக ஏமாற்றி பணம், நகை போன்றவற்றைப் பெற்றுக்கொண்டு, தனிமையான இடத்தில் ஏதாவது ஒரு பூசையைச் செய்து, பிரசாதத்துடன் சயனைடு விஷம் கலந்து கொடுத்து ஆட்களை சிவா கொன்றது தெரியவந்துள்ளது.

இவ்வாறாகக் கொலையுண்ட 10 பேரிடமிருந்து ரூ.24 லட்சம் ரொக்கம், சுமார் 35 சவரன் தங்க நகை போன்றவற்றை சிவா ஏமாற்றிப் பறித்ததும் அம்பலமாகியுள்ளது.

சிவாவுக்கு சயனைடு அளித்து உதவிய ஷேக் அமீனுல்லா பாபுவையும் போலிசார் கைது செய்துள்ளனர். பாபுவின் இளைய சகோதரர் ஆசாத்தின் நிக்கல் பூச்சி ஆலையில் பயன்படுத்தப்படும் சயனைடை ஆசாத்துக்குத் தெரியாமல் சிவாவுக்கு பாபு கொடுத்ததாகக் கூறப்படுகிறது.