தொடரும் வழக்கறிஞர்கள் போராட்டம்

தொடரும் வழக்கறிஞர்கள் போராட்டம்

2 mins read

புதுடெல்லி: டெல்லியில் ஒருபக்கம் நான்காவது நாளாக வழக்கறிஞர்கள் போராட்டத்தில் குதித்த அதே வேளையில் மறுபக்கம் போலிசாரும் தங்களுக்கு போதுமான பாதுகாப்பு வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வழக்கறிஞர்களிடம் போலிசார் நடந்துகொண்ட விதம் குறித்து கண்டனம் தெரிவித்துள்ள இந்திய பார் கவுன்சில், "பயங்கரவாதிகள் போன்று துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு வழக்கறிஞர்கள் ஒன்றும் பாகிஸ்தான் நாட்டினர் அல்ல," என்று கூறியுள்ளது.

அத்துடன், "வழக்கறிஞர்கள் மீது தாக்குதல் நடத்திய போலிஸ் அதிகாரிகளை ஒரு வாரத்திற்குள் கைது செய்யவேண்டும். அப்படி கைது செய்து அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்காவிடில் அவர்கள் கைது செய்யப்படும்வரை தர்ணா போராட்டம் நடத்த வேண்டி இருக்கும்," என்று எச்சரித்துள்ளது.

டெல்லியில் தீஸ்ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் வாகனம் நிறுத்துவது தொடர்பாக தொடங்கிய வாக்குவாத தகராறு கலவரமாக வெடித்தது.

இதையடுத்து போலிஸ் வாகனங்களை வழக்கறிஞர்கள் தீக்கிரையாக்கி, சூறையாடினர்.

இதில் 20 போலிசாரும் 8 வழக்கறிஞர்களும் காயமடைந்தனர்.

இதையடுத்து வழக்கறிஞர்கள் மீது போலிசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சிலர் காயமடைந்தனர்.

இந்நிலையில் 4வது நாளாக நேற்றும் வழக்கறிஞர்கள் பணிக்குத் திரும்பாததால் நீதிமன்ற அலுவல்கள் பெரும் பாதிப்புக்குள்ளானதாக ஊடகத் தகவல்கள் கூறுகின்றன.

இதுகுறித்து இந்திய பார் கவுன்சில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "டெல்லியில் போலிசார் நேற்று போராட்டம் நடத்தியதை கண்டோம். இது சுதந்திர இந்திய வரலாற்றில் கருப்பு தினம். இது அரசியல் மோதலாகவே தெரிகிறது. மிகவும் வருத்தத்திற்குரியது.

போலிசார் போராட்டம்; ஆளுநரிடம் விளக்கம்

டெல்லி உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளிலும் வழக்கறிஞர்களின் போராட்டம் தொடரும் நிலையில் இதற்கு போட்டியாக போலிசாரும் நேற்று போராட்டத்தில் குதித்தனர்.

நீதிமன்ற வளாகத்தில் தங்களை தாக்கிய வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பாதுகாப்பு கோரியும் டெல்லி போலிசார் போராட்டம் நடத்தினர்.

போலிசாருடன் அவர்களுடைய குடும்பத்தாரும் இணைந்து இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பைக் கூட்டியது. இந்நிலையில், டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜாலை டெல்லி போலிஸ் ஆணையர் அமுல்யா பட்நாயக் நேற்று சந்தித்து போலிசாரின் போராட்டம் குறித்து விளக்கம் அளித்ததாகக் கூறப்படுகிறது.