ஒரே பிரசவத்தில் பிறந்த 4 சகோதரிகளுக்கு ஒரே நாளில் திருமணம்

ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு சகோதரிகளுக்கு ஒரே நாளில் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டுள்ளது. 

கேரளாவில் பொத்தென்கோடுவுக்கு அருகில் நன்னாட்டுக்காவு எனும் பகுதியில் வசித்த பிரேம்குமார் - ரமாதேவி தம்பதிக்கு 1995ஆம் ஆண்டு ஒரே பிரசவத்தில் 4 பெண் குழந்தைகளும் ஓர் ஆண் குழந்தையும் பிறந்தனர். 

உத்திர நட்சத்திரத்தில் பிறந்த அவர்களுக்கு உத்ரஜா, உத்ரா, உதாரா, உத்தமா என பெயரிடப்பட்டது. ஆண் குழந்தைக்கு உத்ராஜன் என பெயர் வைக்கப்பட்டது.

பிள்ளைகளுக்கு 9 வயதான நிலையில், பிரேம்குமார் காலமானதையடுத்து, அவர்களது தாயார் ரமாதேவிக்கு  வேலை கொடுத்து உதவியது கேரள அரசு.

இதய நோயால் அவதிப்படும் ரமாதேவி ‘பேஸ்மேக்கர்’ கருவியுடன் வாழ்ந்து வருகிறார். 

இந்த நான்கு பெண்களில் ஒருவர் ஆடை வடிவமைப்பாளர், இருவர் மயக்க மருந்து தொழில்நுட்ப வல்லுநர்கள், மற்றவர் இணையச் செய்தியாளர். மாப்பிள்ளைகள் நால்வரும் அடிப்படையில் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்தான்.

ஆடை வடிவமைப்பாளரான உத்ரா, மஸ்கட்டில் விடுதி ஒன்றின் மேலாளராகப் பணிபுரியும் கே.எஸ். அஜித் என்பவரை மணம் முடிக்கிறார். 

மயக்க மருந்து தொழில்நுட்பர்களில் ஒருவரான உத்ரஜா, குவைத்தில் பணிபுரியும் ஆகாஷ் எனும் மயக்க மருந்து தொழில்நுட்பரைத் திருமணம் செய்கிறார். 

சகோதரிகளில் மற்றொரு மயக்க மருந்து தொழில்நுட்பரான உத்தமா, மஸ்கட்டில் பணிபுரியும் கணக்காளர் ஒருவரை மணக்கிறார்.

இணையச் செய்தியாளரான உதாரா கோழிக்கோட்டில் பணிபுரியும் செய்தியாளரை மணக்கிறார்.

தற்போது நான்கு பேருக்கும் மாப்பிள்ளை பார்த்து திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் பிறந்த நான்கு சகோதரிகளுக்கும் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி திருமணம் முடிக்க நிச்சயிக்கப்பட்டுள்ளது. 

குருவாயூர் கோயிலில் திருமணம் நடக்க உள்ளது. அவர்களது சகோதரர் உத்ராஜன் திருமண ஏற்பாடுகளை செய்து வருகிறார்.