கல்லால் அடித்துக் கொல்லப்பட்ட இந்தியத் தம்பதி

நான்கு ஆண்டுகள் கழித்து பெற்றோரைப் பார்க்க சொந்த ஊருக்குச் சென்ற தம்பதி, கல்லால் அடித்துக் கொல்லப்பட்ட கொடூர சம்பவம் அவர்களது இரு குழந்தைகளை ஆதரவற்றவர்களாக்கியுள்ளது.

கர்நாடகா மாநிலத்தின் கடக் மாவட்டத்தில் லக்காலாகட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் மாதர், கங்கம்மா என்ற இருவரும் காதலித்து வந்தனர். கங்கம்மாவின் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியதால் 2015ஆம் ஆண்டு இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டு தலைமறைவாகினர்.

பெங்களூரு உட்பட கர்நாடக மாநிலத்தின் பல்வேறு ஊர்களில் அவர்கள் கூலி வேலை செய்து பிழைத்து வந்தனர்.
 
இந்நிலையில், 29 வயதான அந்தத் தம்பதியர், உறவினர்களைப் பார்ப்பதற்காக நான்கு ஆண்டுகள் கழித்து சொந்த ஊருக்குத் திரும்பி வந்தனர். 

கடந்த புதன்கிழமை (நவம்பர் 6) அவர்கள் ஊருக்குள் நுழைந்த செய்தி கங்கம்மாவின் அண்ணனை எட்டியது.

கும்பலைத் திரட்டிச் சென்ற கங்கம்மாவின் அண்ணனுடன் அப்பகுதி மக்களும் சேர்ந்து தம்பதியரை கற்களால் சரமாரியாக தாக்கினர். இதில் இருவருமே சம்பவ இடத்திலேயே உயரிழந்தனர்.

இதுகுறித்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

‘கௌரவக் கொலை’யின் வெறியாட்டத்தில் அந்தத் தம்பதியின் இரண்டு குழந்தைகள் ஆதரவற்றவர்களாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.