திருவனந்தபுரம்: ஒரே பிரசவத்தில் ஐந்து பிள்ளைகள் பிறப்பதே அதிசயம். அப்படிப் பிறந்தவர்களில் நால்வருக்கு ஒரே நாளில் திருமணம் நடக்க இருப்பது அதிசயத்திலும் அதிசயம்.
கேரளாவைச் சேர்ந்த பிரேமகுமார் - ரமாதேவி தம்பதிக்கு 1995ஆம் ஆண்டு ஒரே நாளில் சில நிமிட இடைவெளியில் ஆண் ஒன்று, பெண் நான்கு என ஐந்து குழந்தைகள் பிறந்தன. உத்தரம் நட்சத்திரத்தில் பிறந்ததால் அவர்களுக்கு உத்ராஜன், உத்ரஜா, உத்தாரா, உத்தமா, உத்ரா எனப் பெயர்சூட்டி மகிழ்ந்தனர்.
ஒன்பது ஆண்டுகளுக்குப் பின் கணவர் திடீரென இறந்துவிட்டதால் பிள்ளைகளை வளர்க்கப் பெரும் சிரமப்பட்டார் திருமதி ரமாதேவி. ஒருவழியாக, மாவட்ட கூட்டுறவு வங்கியில் அரசு வேலை கிடைக்க, வாழ்க்கையை அவரால் சமாளிக்க முடிந்தது.
குழந்தைகள் வளர்ந்து இப்போது 24 வயதாகிவிட்ட நிலையில், பெண்கள் நால்வருக்குமே அடுத்த ஆண்டு ஏப்ரல் 26ஆம் தேதி குருவாயூர் கோவிலில் திருமணம் நடக்கவிருக்கிறது. இந்த அதிசயத் திருமணம் பற்றித்தான் கேரளாவில் இப்போது பேச்சு!

