உச்ச நீதிமன்றம்: அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம்; மசூதிக்கு மாற்று நிலம் வழங்கப்படவேண்டும்

சர்ச்சைக்குரிய அயோத்தி நிலத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.  அந்த இடத்தில் ராமர் கோயில் கட்ட மத்திய அரசு ஓர் அமைப்பை உருவாக்க வேண்டும் என்றும் இன்று (நவம்பர் 9) காலை வழங்கப்பட்ட தீர்ப்பில்
கூறப்பட்டுள்ளது.

வழக்குத் தொடர்ந்த சன்னி வக்ஃபு வாரியம் ஏற்றுக்கொள்ளும் இடத்தில் 5 ஏக்கர் நிலம் இஸ்லாமியர்கள் புதிய பள்ளிவாசல் கட்டிக்கொள்ள வழங்கப்பட வேண்டும் என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தத் தீர்ப்பை மூன்று மாதங்களுக்குள் செயல்படுத்த வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், 1992ஆம் ஆண்டு இடிக்கப்பட்ட 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாபர் மசூதி இருந்த இடம் முழுக்க முழுக்க தங்களுக்குச் சொந்தமான பகுதி என்பதை இஸ்லாமிய அமைப்புகள் நிரூபிக்கவில்லை என்று குறிப்பிட்ட நீதிபதிகள், 1857ஆம் ஆண்டுக்கு முன்பு வரை அந்த சர்ச்சைக்குரிய இடத்தின் உள்பகுதியில் இந்துக்கள் வழிபடத் தடை இருந்திருக்கவில்லை என்றனர். 

காலியிடத்தில் மசூதி கட்டப்படவில்லை என்றும்  அதற்கு முன்பு அங்கிருந்த கட்டுமானம் இஸ்லாமிய கட்டுமானம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும், ஆவணங்களின்படி அந்த நிலம் அரசுக்குச் சொந்தமானது என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

தொல்லியல் துறையின் அறிக்கையை நிராகரிக்க முடியாது என்று குறிப்பிட்டதுடன், இந்துக் கடவுள் ராமர் பிறந்த இடம்  அயோத்திஎன்பது இந்துக்களின் நம்பிக்கை என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.

வழக்குத் தொடர்ந்த மற்றோர் அமைப்பான நிர்மோகி அகாராவின் வாதம் ஏற்புடையதாக இல்லை என்று சுட்டிக்காட்டப்பட்டதுடன், சன்னி வக்போர்டுக்கு எதிராக ஷியா வக்போர்டு தொடர்ந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 

சர்ச்சைக்குரிய நிலத்தை 3 தரப்புக்கும் பிரித்து வழங்கி அலகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சரியானதல்ல என்று குறிப்பிட்ட நீதிபதிகள், அரசியலுக்கு அப்பாற்பட்டு சட்டம் நிலைநாட்டப்பட வேண்டும் என்றனர். 

இந்த வழக்கை முதலில் விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம், வழக்குத் தொடர்ந்த சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய 3 அமைப்புகளும் நிலத்தை சரிசமமாக பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று 2010ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது. 

இதை எதிர்த்து அந்த அமைப்புகள் உள்ளிட்ட 14 பேர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்து வந்தது.

விசாரணை நடந்துகொண்டு இருந்தபோதே, இந்த விவகாரத்தில் நீதிமன்றத்துக்கு வெளியே தீர்வு காணும் யோசனையை முன்வைத்த அரசியல் சாசன அமர்வு, ஓய்வுபெற்ற நீதிபதி கலிபுல்லா, வாழும் கலை அமைப்பின் தலைவர் ரவிசங்கர், வழக்கறிஞர் ராம் பஞ்சு ஆகியோரைக்கொண்ட சமரச குழுவை அமைத்தது. ஆனால், அந்தக் குழுவால் எந்த முடிவும் எட்டப்படவில்லை. 

இதைத் தொடர்ந்து, இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதி முதல்  தொடர்ந்து 40 நாட்களுக்கு இந்த வழக்கின் விசாரணையை அரசியல் சாசன அமர்வு மேற்கொண்டதையடுத்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

இன்று தீர்ப்பு வழங்கப்பட இருப்பதாக நேற்றிரவுதான் தகவல் வெளியானது. ஆனால், சில நாட்கள் முன்னதாகவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உத்தரப் பிரதேசத்தில் குறைந்தது 12,000 பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டனர். வாரணாசி, குஜராத் போன்ற பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. எட்டு தற்காலிகச் சிறைகள்கூட அமைக்கப்பட்டன. கோவாவில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டது.

இன்று மும்பையிலும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதன் எதிரொலியாக மும்பையில் மட்டும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 60 பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

“அமைதியைச் சீர்குலைக்க சில சமூக விரோத சக்திகள் முயற்சிப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது,” என்று மும்பை போலிஸ் ஆணையர் பிரணாய அசோக் தெரிவித்தார்.