மோடி: தீர்ப்பு யாருக்கும் வெற்றியோ தோல்வியோ அல்ல

பல ஆண்டுகளாக இழுபறியில் இருந்த அயோத்தி வழக்கின் தீர்ப்பு இன்று காலை வெளியாகியுள்ள நிலையில், “அயோத்தி வழக்கின் தீர்ப்பு யாருக்கும் வெற்றியோ தோல்வியோ அல்ல,” என்று தமது டுவிட்டர் பதிவில் இந்தியப் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். நாட்டின் அமைதியை அனைவரும் பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“இன்று அளிக்கப்பட்டுள்ள தீர்ப்பு இந்திய நீதி பரிபாலனத்தின் மைல்கல். தீர்ப்பைத் தொடர்ந்து அனைவரும் அமைதி, சமய நல்லிணக்கத்தைக் காக்க வேண்டும்,” என்று மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக தலைவருமான அமித் ஷா கூறியுள்ளார்.

இந்நிலையில், இன்று காலை புதுடெல்லியில் திருமதி சோனியா காந்தியின் தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் அயோத்தி வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பை ஆதரிப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  

காங்கிரஸ் பேச்சாளர் ரன்தீப் சுர்ஜேவாலா, ‘‘ராமர் கோயில் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் ஆதரிக்கிறோம்,’’ என்றார்.

தீர்ப்பு வெளியாவதற்கு முன்னதாகவே, மத்திய அரசு  இந்த தீர்ப்பிற்கு உரிமை கோர முடியாது என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.