தீர்ப்பில் திருப்தி இல்லை: சன்னி வக்ஃப் வாரியம்

புதுடெல்லி: அயோத்தி நில உரிமை தொடர்பான வழக்கில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்  தீர்ப்பை வாசித்தார்.

சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டிக்கொள்ளலாம். இதற்காக மூன்று மாதங்களுக்குள் மத்திய அரசு ஓர் அறக்கட்டளையை ஏற்படுத்த வேண்டும். முஸ்லிம்கள் மசூதி கட்டுவதற்கு வேறு இடத்தில் 5 ஏக்கர் நிலம் வழங்கப்படவேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

வழக்கின் தீர்ப்பு வெளியானதை அடுத்து, சன்னி வக்ஃப் வாரியத்தின் சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. 

அப்போது பேசிய வாரியத்தின் வழக்கறிஞர் ஜாஃபர்யாப் ஜிலானி தீர்ப்பு தொடர்பாக அதிருப்தி தெரிவித்தார். 

“அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறோம். ஆனால் எங்களுக்கு திருப்தியில்லை. தீர்ப்பை யாருடைய வெற்றி தோல்வியாக கருதக்கூடாது. மக்கள் அமைதி காக்க வேண்டும். 

“உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் அனைத்து கருத்துகளையும் நாங்கள் மறுக்கவில்லை. தீர்ப்புக்கு எதிராக எங்கும் எந்தப் போராட்டமும் நடத்தக்கூடாது. தீர்ப்பு குறித்து உரிய ஆலோசனைக்குப் பின் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தீர்ப்பின் முழு விவரத்தை படித்தபின் சீராய்வு மனு தாக்கல் செய்வது குறித்து முடிவு செய்யப்படும்,” என்றார்.

மதச்சார்பற்ற கட்டமைப்பை பேணிக் காக்க இந்த தீர்ப்பு பெரிதும் உதவும் என்றார். தங்களுக்கு வழங்கப்படும் 5 ஏக்கர் நிலம் தங்களை பொறுத்தவரை மதிப்பற்றது எனவும் ஜிலானி அதிருப்தி தெரிவித்தார்.

இந்நிலையில், அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு மதிப்பளிப்பதாக காங்கிரஸ் கட்சி செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார். 

“உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு எந்தவொரு தனிநபர், குழு, சமூகங்கள் அல்லது அரசியல் கட்சிகளுக்கு சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ வழங்கப்படவில்லை. அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படுவதற்கு நாங்கள் ஆதரவளிக்கிறோம்.” என அவர் தெரிவித்தார். 

அனைத்து தரப்பினரும் மதச்சார்பின்மையை கடைப்படித்து, அமைதி காக்க வேண்டும் என்று காங்கிரஸ் செயற்குழு தீர்மானம்  நிறைவேற்றி, வேண்டுகோள் விடுத்துள்ளது.