தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சுவிஸ் வங்கியில் ரூ.320 கோடி; கேட்க ஆளில்லை

1 mins read
0045f1b5-7901-4ac5-8f0c-d59cefa6d204
-

புதுடெல்லி: சுவிஸ் வங்கியில் செயல்படாத கணக்குகளில் 320 கோடி ரூபாய் உள்ளது. இதில் பெரும்பகுதி பணம் இந்தியர்களுக்கு சொந்தமானதாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்தப் பணத்துக்கு சொந்தமானவர்கள் அல்லது அவர்களுடைய வாரிசுகள் உரிமை கோர முடியும். ஆனால் கடந்த ஆறு ஆண்டுகளில் இந்தியர்கள் யாரும் பணத்துக்கு உரிமை கோரி முன்வரவில்லை.

சுவிஸ் வங்கி துறை தீர்ப்பாயத்தில் உள்ள தகவல்களின்படி கோல்கத்தாவைச் சேர்ந்த 2 பேர், டேராடூனைச் சேர்ந்த ஒருவர், மும்பையை சேர்ந்த 2 பேர், பிரான்ஸ், இங்கிலாந்தில் குடியேறிய இந்தியர்கள் உள்ளிட்டவர்களின் வங்கிக் கணக்குகள்செயல்படாமல் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பணத்தை உரிமை கோர 2 இந்தியர்களுக்கு விதிக்கப்பட்ட கெடு வருகிற 15ஆம் தேதியும் மூன்று பேருக்கான கெடு அடுத்த மாதமும் முடிவடைகிறது. எஞ்சிய இந்தியர்கள் அடுத்த வருடம் டிசம்பர் வரை பணத்தை மீட்க வாய்ப்பு உள்ளது.

பணத்தை மீட்க விரும்புபவர்கள் குறிப்பிட்ட காலத்துக்குள் அதற்குரிய ஆவணங்களை சுவிஸ் வங்கியில் தாக்கல் செய்ய வேண்டும். அதன் அடிப்படையிலேயே வங்கி வாடிக்கையாளர்கள் பணத்தை மீட்க வாய்ப்புள்ளது என்று சுவிஸ் வங்கித்துறை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது. ஆனால் இந்தப் பணத்துக்கு உரிமை கோரினால் கருப்புப் பண விவகாரத்தில் சிக்க வேண்டியிருக்கும் என்பதால் இந்தியர்கள் யாரும் உரிமை கோர முன்வரவில்லை என்று கூறப்படுகிறது. அப்படி யாரும் பணத்துக்கு உரிமை கோர முன்வரவில்லை என்றால் உரிமை கோரப்படாத ரூ. 320 கோடி ரூபாயை சுவிட்சர்லாந்தே எடுத்துக்கொள்ளும் நிலை உள்ளது.