சுடச் சுடச் செய்திகள்

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க சிவசேனா தீவிரம்

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சியமைக்க சிவசேனா தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. இதற்காக மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகவும் அது முடிவு செய்துள்ளது.

மொத்தம் 288 சட்டப்பேரவை தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜக (105)- சிவசேனா (56) கூட்டணி 161 தொகுதிகளையும் காங்கிரஸ் (44) - தேசியவாத காங்கிரஸ் (54) கூட்டணி 117 தொகுதிகளையும் கைப்பற்றியது. அம்மாநிலத்தில் ஆட்சி அமைக்க 145 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை எனும் நிலையில் அந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 

கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த பாஜக-சிவசேனா இடையே ஆட்சி அமைக்க போதுமான எம்.எல்.ஏக்கள் இருந்தாலும் முதல்வர் பதவியை சுழற்சி முறையில் பகிர்ந்து கொள்வது, அதிகாரத்தை சரிசமமாகப்  பகிர்ந்து கொள்வதில் மோதல் ஏற்பட்டதால் ஆட்சி அமைப் பதில் இழுபறி நீடித்து வந்தது.

இதனிடையே, அதிக இடங்களைக் கைப்பற்றிய கட்சி என்ற அடிப்படையில் ஆட்சியமைக்க வருமாறு பாஜகவுக்கு மகாராஷ்டிர ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி அழைப்பு விடுத்தார். எனினும், போதுமான பெரும்பான்மை இல்லாததால் மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க விரும்பவில்லை என அறிவித்துள்ளது. இதையடுத்து, 56 இடங்களைக் கைப்பற்றிய 2வது தனிப்பெரும் கட்சியான சிவசேனாவுக்கு மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க விருப்பமா எனக் கேட்டு ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி அழைப்பு விடுத்துள்ளார். இந்த நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து சிவசேனா விலக முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

மேலும் காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் இணைந்து ஆட்சியமைக்க சிவசனோ முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மும்பை பன்ட்ரா பகுதியில் உள்ள தாஜ் லேன்ட்ஸ் ஹோட்டலில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நேற்று பிற்பகல் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

உத்தவ் தாக்கரேவுடன் அவரது மகன் ஆதித்யா தாக்கரே, சஞ்சய் ராவத் ஆகியோரும் வந்திருந்தனர். சுமார் ஒருமணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனைக்குப் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்க இரு தலைவர்களும் மறுத்துவிட்டனர்.

இதற்கிடையில், சிவசேனாவுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக டெல்லியில் காங்கிரஸ் பிரமுகர்களுடன் சோனியா காந்தி நேற்று நடத்திய பேச்சுவார்த்தையில் ஓரளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட ஆலோசனைக்கு பின்னர் மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான ஆட்சி அமைப்பதற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆட்சியமைக்க 145 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவையென்ற நிலையில் 54 எம்எல்ஏக்களைக் கொண்ட தேசியவாத காங்கிரஸ், 44 எம்எல்ஏக்களைக் கொண்ட காங்கிரஸ் ஆகியவை ஆதரவளிக்கும் பட்சத்தில் சிவசேனை கட்சியால் ஆட்சி அமைக்க முடியும்.

சிவசேனாவுக்கு சோதனை

சிவசேனா கட்சியின் மூத்த தலைவரான சஞ்சய் ராவத் மும்பையில் உள்ள பிரபலமான லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரின் உடல்நிலை தொடர்ந்து கண் காணிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளதாக சஞ்சய் ராவத்தின் குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

அதிகாரப் பகிர்வுக்கு இணங்காத பாஜகவை கடுமையாக விமர்சித்தும் சிவசேனா தலைமையில் ஆட்சியமைப்பதற்கான முயற்சியை முன்னெடுத்ததிலும் சஞ்சய் ராவத் பிரதான பங்கு வகித்து வந்தார். இந்த நிலையில் நேற்று அவருக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டது. தற்போது அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.