கும்கியின் உதவியுடன் லேடனைப் பிடித்த அதிகாரிகள்

கும்கியின் உதவியுடன் லேடனைப் பிடித்த அதிகாரிகள்

1 mins read
f479c149-42a4-4388-a28b-55a7efd6c2c9
மயக்க மருந்து தோய்த்த இரண்டு அம்புகளைப் பாய்ச்சி லேடன் பிடிக்கப்பட்டது. படம்: ஏஎஃப்பி -

கௌஹாத்தியில் கிராமவாசிகள் ஐவரைக் கொன்ற 'லேடன்' என்ற யானையைப் பெரும்பாடுபட்டு பிடித்துள்ளனர் அதிகாரிகள்.

அசாமின் வடகிழக்குப் பகுதியில் 'டிரோன்' எனப்படும் ஆளில்லா வானூர்திகள், கும்கி யானைகள் போன்றவற்றின் உதவியுடன் லேடனை அதிகாரிகள் பல நாட்களாகத் தேடிவந்தனர்.

இறுதியில் யானை இருந்த இடத்தைக் கண்டுபிடித்து மயக்க மருந்து தோய்த்த இரண்டு அம்புகளைப் பாய்ச்சி அதனைப் பிடித்ததாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அக்கம்பக்கத்தில் மனிதர்கள் இல்லாத அடர்ந்த வனப்பகுதிக்கு இந்த யானையை மாற்ற வேண்டும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

கடந்த மாதம் கோல்பரா மாவட்டத்தில் 24 மணி நேரத்துக்குள்ளாக மூன்று பெண்கள் உட்பட ஐவரைக் கொன்றது லேடன்.

இந்தியாவில் கடந்த ஐந்தாண்டுகளில் கிட்டத்தட்ட 2,300 பேர் யானைகளால் கொல்லப்பட்டிருப்பதாகவும் 2011ஆம் ஆண்டிலிருந்து இதுவரை சுமார் 700 யானைகள் கொல்லப்பட்டிருப்பதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

வனங்கள் அழிக்கப்படுவதனால் ஊருக்குள் யானைகள் புகுந்து நாசப்படுத்துவதுடன் மனிதர்களையும் பலிகொள்கின்றன.

சில வேளைகளில் மனிதர்களே யானைகளுக்கு விஷம் வைப்பதுண்டு. சிலர் யானைகளைச் சுட்டுக் கொன்று விடுகின்றனர். மின்சாரம் பாய்ந்தோ அல்லது ரயில் பாதையைக் கடக்கும்போதோ சில யானைகள் இறப்பதுண்டு.