கைகளின்றி 'கைகொடுத்த' ஓவியர்

தனக்கு கைகள் இல்லையென்றாலும் கேரள மக்களின் நலனில் அக்கறை கொண்ட ஓவியர் பிரணவ் பாலசுப்பிரமணியன், தனது கால்களால் தீட்டிய ஓவியங்களுக்குக் கிடைத்த வருமானத்தில் சேமித்துவைத்த தொகையை முதலமைச்சரின் துயர்துடைப்பு நிதிக்காக முதல்வர் பினராயி விஜயனை நேரடியாகச் சந்தித்து அளித்துள்ளார்.

அப்போது ஓவியர் பிரணவைச் சந்தித்த முதல்வர் பினராயி, ஓவியரின் கால்களைப் பிடித்து 'கைகுலுக்கிப்' பாராட்டினார். 

கேரளாவின் ஆலத்தூரைச் சேர்ந்த இளம் ஓவியர் பிரணவ் முதல்வர் பினராயி விஜயனுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார்.

ஓவியருடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். 

“ஆலத்தூரைச் சேர்ந்த இளம் ஓவியர் எனது அலுவலகத்திற்கு வந்து என்னைச் சந்தித்து “முதலமைச்சர் துயர்துடைப்பு நிதி”க்கு பங்களித்துச் சென்றார். இந்தக் காலை வேளையில் எனக்குக் கிடைத்த இந்த இனிய அனுபவம் என்னை மெய்சிலிர்க்கச் செய்தது,” என்று ஓவியர் பிரணவ் பாலசுப்பிரமணியைப் பாராட்டியுள்ளார் முதல்வர் பினராயி விஜயன். 

இதுபோன்று நிதியளிப்பது பிரணவுக்கு முதல் முறையல்ல. கடந்த 2018ஆம் ஆண்டில் கேரள மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது துயர்துடைப்பு நிதிக்காக ரூ.5,000 வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.