சுடச் சுடச் செய்திகள்

இயந்திரத் துப்பாக்கி ஏந்தி வந்த மணமக்கள்

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் அண்டை நாடான மியன்மார் ஆதரவு பெற்ற எம்எஸ்சிஎன் (யு) எனப்படும் ‘கப்லான்’ என்னும் பயங்கரவாத அமைப்பு அரசுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது.

நாகாலாந்தில் எம்எஸ்சிஎன் (யு) பயங்கரவாத அமைப்பு உள்ளிட்ட 7 நாகா குழுக்கள் மத்திய அரசுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிட்டுள்ளன.

இந்த அமைப்பின் தலைவரான போஹோட்டோ கிபா என்பவரின் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நாகாலாந்தின் திமாபூர் மாவட்டத்தில் 9.11.2019ஆம் தேதி நடந்தது.

அப்போது மணமக்கள் இருவரும் ஏ.கே. 56, மற்றும் எம்.16 ரக அதி நவீன தானியங்கி இயந்திர துப்பாக்கியைக் கையில் வைத்துக்கொண்டிருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

கழுத்தில் மாலையுடன் இருக்க வேண்டிய மணமக்கள் இருவரும் துப்பாக்கிகளுடன் இருந்தது திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்தவர்களைப் பீதிக்குள்ளாக்கியதாகக் கூறப்படுகிறது.