பேய் வேடமிட்டு பதற வைத்த இளையர்களைக் கைது செய்து கதறவிட்ட அதிகாரிகள்

பேய் வேடமிட்டு பதற வைத்த இளையர்களைக் கைது செய்து கதறவிட்ட அதிகாரிகள்

1 mins read
d49bc9f6-d07c-4576-8110-38dc0df67f22
பேய் போன்ற வேடமிட்ட இவர்கள் வாகனங்களில் சென்றவர்களை பயமுறுத்தியதுடன் நில்லாமல் திறந்த வெளியில் தூங்கிக்கொண்டிருந்தவர்களையும் குறிவைத்ததாகத் தெரிகிறது. படம்: ஊடகம் -

'யூடியூப்' சேனலை பிரபலப்படுத்த பேய் வேடம் போட்டு, நள்ளிரவில் சாலையில் சென்ற வாகன ஓட்டிகளைப் பயமுறுத்திய 7 இளையர்களை பெங்களூரு போலிசார் கைது செய்தனர். அவர்கள் அனைவரும் 20 முதல் 22 வயதுக்குட்பட்டவர்கள் என்று கூறப்பட்டது.

மாணவர்களான இவர்கள் தங்களது பகடி காணொளியை 'யூடியூப்'பில் பதிவேற்ற விரும்பி இந்தச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டது.

பேய் போன்ற வேடமிட்ட இவர்கள் வாகனங்களில் சென்றவர்களை நிறுத்துவது, வாகனங்களை பின்னோக்கி ஓட்டச் சொல்வது என பயமுறுத்தியதுடன் நில்லாமல் திறந்த வெளியில் தூங்கிக்கொண்டிருந்தவர்களையும் குறிவைத்ததாகத் தெரிகிறது.

அமைதியைக் குலைத்தல், சட்டவிரோதமாக அச்சுறுத்துதல், தவறான முறையில் கட்டுப்படுத்துதல், அவமானப்படுத்துதல் ஆகியவற்றுடன் தொடர்புடைய இந்திய குற்றவியல் சட்டப் பிரிவின்கீழ் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஹரிஷ் உபாத்யா என்பவர் வெளியிட்ட ஒரு காணொளி இணையத்தில் வலம் வருகிறது.

அந்த மாணவர்களில் ஒருவரது கைபேசியில் பல காணொளிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த பகடி விளையாட்டுகள் விபத்துகளைக்கூட விளைவித்திருக்கலாம் என்று கூறப்பட்டது. மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய பகடிகளைப் பதிவேற்ற 'யூடியூப்' அனுமதி அளிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்