சுடச் சுடச் செய்திகள்

சிவசேனா: உரிய நேரத்தில் சரியான முடிவு அறிவிக்கப்படும்

மும்பை: மகாராஷ்டிரத்தில் ஆட்சி அமைப்பது தொடர்பான குறைந்தபட்ச பொதுச்செயல் திட்டத்தை உருவாக்குவது குறித்து காங்கிரஸ் குழுவினருடன் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மும்பையில் புதன்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தச் சந்திப்புக் குறித்துக் கருத்துத் தெரிவித்த உத்தவ் தாக்கரே, “பேச்சுவார்த்தை சரியான பாதையில் செல்கிறது; திருப்திகரமாக உள்ளது,” என்றார்.

மகாராஷ்டிரத்தில் ஆட்சி அமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்த நிலையில், ஆளுநரின் பரிந்துரைப்படி செவ்வாய்க்கிழமை அந்த மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.  இதையடுத்து, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்க சிவசேனா முனைப்பாக உள்ளது. இது தொடர்பாகப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு பொதுசெயல் திட்டம் உருவாக்க அம்மூன்று கட்சிகளும் முடிவு செய்தன.

இதன் ஒருபகுதியாக மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவர் பாலாசாகிப் தோரத், அந்த மாநில முன்னாள் முதல்வர் அசோக் சவான், கட்சியின் மூத்த தலைவர் மாணிக்ராவ் தாக்கரே ஆகியோர், உத்தவ் தாக்கரேவை மும்பைப் புறநகர் பகுதியில் உள்ள விடுதியில் சந்தித்துப் பேச்சு நடத்தினர். சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது ஆட்சி அமைப்பதற்காக குறைந்தபட்ச பொதுச் செயல்திட்டத்தை வகுப்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய உத்தவ் தாக்கரே, “பேச்சுவார்த்தை சரியான பாதையில் சுமுகமாக நடைபெற்றது. உரிய நேரத்தில் சரியான முடிவு அறிவிக்கப்படும்,” என்றார்.

மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் தோரத் செய்தியாளர்களிடம் பேசுகையில், “மாநிலத்தில் ஆட்சி அமைப்பது தொடர்பாகச் சுமூகமான சூழ்நிலையை உருவாக்கப் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளது.  சிவசேனாவிடம் வலியுறுத்த வேண்டிய விஷயங்கள் குறித்து காங்கிரஸ், என்சிபி ஏற்கெனவே பேச்சு நடத்தியுள்ளன,” என்றார். “ஒரு சுமூகமான சூழ்நிலையை உருவாக்குவதற்காக இந்தச் சந்திப்பு நடைபெற்றது,” என்று மாணிக்ராவ் தாக்கரே கூறினார்.