அனுமதி மறுப்பு: சபரிமலையில் 10 பெண்களை திருப்பி அனுப்பியது போலிஸ்

பம்பை: கேரள மாநிலத்தில் உள்ள மிகவும் பிரபலமான சபரிமலைக்குப் புறப்பட்ட ஆந்திராவைச் சேர்ந்த 10 பெண்கள், கேரளாவில் பம்பை நகரில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு எல்லா வயதுப் பெண்களும் சென்று தரிசனம் செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் சென்ற ஆண்டு தீர்ப்பளித்தது. ஆனால் அதற்குப் பெரும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து தீர்ப்பை மறுசீராய்வு செய்யக்கோரி 66 மனுக்கள் தாக்கலாயின. 

அவற்றை விசாரித்த உச்ச நீதிமன்றம், வழக்கை 7 நீதிபதிகளைக் கொண்ட அமர்வுக்கு மாற்றியது. அதேவேளையில், ஐயப்பன் கோயிலுக்குச் செல்ல பெண்களுக்கு நீதிமன்றம் தடை விதிக்கவில்லை. 

இருந்தாலும் சபரிமலை வரும் பெண்களுக்கு இந்த முறை பாதுகாப்பு வழங்குவது இல்லை என்ற முடிவை கேரள அரசு எடுத்துள்ளது. இந்நிலையில், 41 நாட்கள் மண்டல பூஜைக்காக நேற்று சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டது. 

ஐயப்பன் தரிசனத்துக்காக பல 133 பெண்கள் இணையம் மூலம் பதிவு செய்து இருக்கிறார்கள்.

இந்தச் சூழலில், சபரிமலையில் ஐயப்பன் சுவாமியைத் தரிசிக்க ஆந்திராவின் விஜயவாடாவில் இருந்து வந்த 10 முதல் 50 வரை வயதுள்ள 10 பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

முன்னதாக, சபரிமலையின் ஐதீகம் மற்றும் நம்பிக்கை குறித்து பெண்களிடம் போலிசார் எடுத்துக்கூறியதாக தகவல் வெளியானது. இதேபோல் மேலும் பல பெண்கள் வருவார்கள் என்பதால் போலிசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர். கோயிலுக்கு வரும் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் அனைவருக்கும் ஆலோசனை, அறிவுரை கூறி அவர்களைத் திருப்பி அனுப்பப்போவதாக போலிஸ் தெரிவித்துள்ளது. 

இளம்பெண்கள் சபரிமலைக்கு வந்தால் அவர்களைத் தடுத்து நிறுத்துவோம் என்று ஐயப்ப பக்தர்களும் இந்து அமைப்புகளும் ஏற்கெனவே அறிவித்து இருந்தன.