ஏர்இந்தியா, பாரத் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களை மார்ச் மாதத்திற்குள் விற்பனை செய்ய இந்திய அரசு திட்டமிட்டுள்ளதாக இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.
“இந்த நிதி ஆண்டுக்குள் இரு நிறுவனங்களின் விற்பனையை இறுதிசெய்யும் வகையில் செயல்பட்டு வருகிறோம். பொருளாதார நிலையை மேம்படுத்த அரசாங்கம் எடுத்துவரும் பல்வேறு நடிவடிக்கை களால் பல துறைகள் பின்னடை விலிருந்து மீண்டு வருகின்றன,” என்று டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறினார்.
அரசு பொதுத்துறையை சேர்ந்த மிகப்பெரிய நிறுவனங்களான ஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் ஏற்கெனவே விற்பனை செய்யப்படும் எனக் கூறப்பட்டு வந்தநிலையில் விற்பனையைத் துரிதப்படுத்த தற்போது அரசாங்கம் முனைந்துள்ளது. நெருக்கடியான வரிவசூல் ஆண்டில் இந்த நிறுவனங்களை விற்பதன் மூலம் கிடைக்கக்கூடிய வருமானத்தை அரசாங்கம் நம்பியிருக்கிறது என்றார் நிர்மலா சீதாராமன்.
நடப்பு நிதியாண்டில் 1 டிரில்லியன் ரூபாய்க்கும் அதிகமான முதலீட்டு இலக்கை அடைய இந்த நிறுவனங்களின் விற்பனை அவசியம். அரசின் இலக்கை அடைய இது ஏதுவாக அமையும்.
இந்த நிறுவனங்களின் விற்பனை மூலம் இந்த நிதி ஆண்டுக்குள் ஒரு லட்சம் கோடிக்கும் அதிகமான நிதியைத் திரட்ட திட்டமிட்டுள்ளோம் என்று நிர்மலா கூறினார்.
நிதி நெருக்கடியால் நஷ்டத்தில் ஓடிக்கொண்டிருக்கும் ஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம் நிறுவனங்களை வாங்க முதலீட்டாளர்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். முன்னர் முதலீட்டாளர்களிடம் இருந்து தெளிவான பதில் கிடைக்காததால் ஓர் ஆண்டுக்கு முன்பே நஷ்டத்தில் இருக்கும் ஏர் இந்தியாவை விற்க முடியாமல் போனது என்றார் அவர்.
இந்தியாவின் பல துறைகள் தற்போது நெருக்கடிநிலையிலிருந்து மீண்டு வருகின்றன. தொழிலதிபர்கள் பலர் தங்கள் நிறுவனங்களின் வரவுசெலவு நிலையை மேம்படுத்தி வருவதுடன், பல புதிய முதலீடுகளுக்கும் திட்டமிட்டுள்ளனர்.
சில பிரிவுகளில் அரசின் துரித நடவடிக்கையால் விற்பனையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. விற்பனையை மேம்படுத்த அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் வரும் இந்த நிதி ஆண்டிலேயே பொருள்சேவை வரி மூலம் கிடைக்கும் வருமானம் உயரும் என அவர் சுட்டினார். வங்கிகளின் பண்டிகைக் கால கடன் வழங்கும் திட்டங்கள் மூலம் 1. 8 லட்சம் கோடி ரூபாய் கடன் கொடுக்கப்பட்டுள்ளது எனவும் நிதியமைச்சர் நிர்மலா குறிப்பிட்டுள்ளார்.