புதுடெல்லி: தூய்மையான குடிநீர் வழங்குவதில் நாட்டில் உள்ள முக்கியப் பெருநகரங்களில் மும்பை முதலிடம் பிடித்துள்ளது. அதேசமயம் டெல்லி, சென்னை உள்ளிட்ட நகரங்களுக்குத் தூய்மையான குடிநீர் வழங்கும் நகரங்களின் பட்டியலில் கடைசி இடமே கிடைத்துள்ளது.
மத்திய நுகர்வோர் துறைக்குட்பட்ட இந்தியத் தரக்கட்டுப்பாட்டு முகமை அண்மையில் நாடு முழுவதும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீரின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டது.
மொத்தம் 17 மாநிலங்களின் தலைநகரங்களில் குடிநீரின் தரம் குறித்த பரிசோதனைகள் நடத்தப்பட்டன.
தண்ணீரில் கலந்திருக்கும் கனிமங்கள், ரசாயனங்கள், கிருமிகள், துர்வாடை உள்ளிட்ட 11 வகையான தரக்கட்டுப்பாடுகளின் அடிப்படையில் இந்தப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் மும்பை மாநகரில்தான் குடிநீர் மிகத் தரமாக வழங்கப்படுகிறது என்பது தெரியவந்துள்ளது.
அங்கு மக்களுக்கு வழங்கப்படும் குடிநீரை வேறு எந்த வகையிலும் மறுசுழற்சி செய்ய வேண்டியதில்லை என்றும் அந்தளவிற்குக் குடிநீர் தூய்மையாக உள்ளது என்றும் ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
மும்பையில் மட்டும் 10 வெவ்வேறு இடங்களில் குடிநீர் மாதிரிகள் பெறப்பட்டன என்றும், அவை அனைத்துமே ஒரே அளவில் தூய்மையாக இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் நாட்டின் தலைநகரான டெல்லி, தமிழகத் தலைநகரான சென்னை, மேற்கு வங்க மாநிலத் தலைநகரான கொல்கத்தாவில் குடிநீர் தரமாக இல்லை எனத் தெரியவந்துள்ளது. நிர்ணயிக்கப்பட்ட 11 வகையான சோதனைகளில் இம்மூன்று நகரங்களில் வழங்கப்படும் குடிநீர் தேர்ச்சி பெறவில்லை.
இதேபோல் ஹைதராபாத், புவனேஸ்வர், ராஞ்சி, அமராவதி, சிம்லா உள்ளிட்ட நகரங்களில் வழங்கப்படும் குடிநீரும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தரக்கட்டுப்பாடுகளுக்குப் பொருந்தவில்லை என்று தரக்கட்டுப்பாட்டு முகைமை தெரிவித்துள்ளது.
சண்டிகர், கவுகாத்தி, பெங்களூரு, லக்னோ, ஜம்மு, டோராடூன், காந்தி நகர் உள்ளிட்ட சில முக்கிய நகரங்களிலும் தரமான குடிநீர் வழங்கப்படவில்லை என அந்த முகைமை தந்த அறிக்கை தெரிவிக்கிறது.