மாணவிகளுடன் கையில் வாளேந்தி நடனமாடிய அமைச்சர்

புதுடெல்லி: மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி கலை நிகழ்ச்சி ஒன்றில் நடனமாடியது தொடர்பான காணொளிப்பதிவு இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. அமைச்சர் சிறப்பாக நடனமாடியதாகப் பலரும் அவரைப் பாராட்டி உள்ளனர்.

குஜராத் மாநிலத்தின் பாவ் நகரில் உள்ளது சுவாமி நாராயண் குருகுலம். நேற்று முன்தினம் இங்கு பெண்கள் மேம்பாட்டு மன்றம் சார்பில் கலைவிழா நடைபெற்றது. இதில் மத்திய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். 

இந்நிகழ்வில் மாணவிகள் சிலர் ‘தல்வார் ராஸ்’ எனப்படும் குஜராத்தின் பாரம்பரிய நடனத்தை மேடையில் ஆடினர். இந்த நடனத்தைக் கைகளில் வாள் ஏந்தியபடி ஆடவேண்டும். மாணவிகள் இரு கைகளிலும் வாள்களை ஏந்திக்கொண்டு நடனமாடியதை அமைச்சர் ஸ்மிர்தி இராணி ஆர்வத்துடன் கண்டு ரசித்தார்.

இந்நிலையில் மாணவிகளுடன் சேர்ந்து அமைச்சரும் நடனமாட வேண்டுமென்று விழா ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொண்டனர். இதையடுத்து ஸ்மிருதி ராணியும் மிகுந்த உற்சாகத்துடன் மேடை ஏறினார். 

அவர் இரு கைகளிலும் வாள் ஏந்தியதுடன், அவற்றை லாவகமாகச் சுழற்றி நடனமாடியது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. அவர்கள் கைதட்டி அமைச்சரை உற்சாகப்படுத்தினர். 

தற்போது அமைச்சர் நடனமாடிய காட்சி அடங்கிய காணொளித் தொகுப்பு சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. படம்: ஊடகம்