பேருந்தும் லாரியும் மோதிக்கொண்ட கோர விபத்தில் 10 பேர் பலி; 25 பேர் படுகாயம்

ஜெய்ப்பூர்: லாரியும் பேருந்தும் மோதிக் கொண்ட விபத்தில் 10  பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தின் பிகானர் மாவட்டத்தில் நேற்று நிகழ்ந்துள்ளது. 

பயணிகளை ஏற்றிக்கொண்டு ஸ்ரீதங்கர்கர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது அந்தப் பேருந்து. அப்போது சாலையின் எதிர்புறம் வந்த ஒரு லாரி பேருந்தின் மீது பயங்கர வேகத்தில் மோதியது. 

கண்ணிமைக்கும் நேரத்தில் விபத்து நிகழ்ந்து விட்டதாகவும், இரு வாகனங்களும் கடுமையாகச் சேதமடைந்ததாகவும் விபத்து நடந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தெரிவித்தனர். லாரி மோதியதில் பேருந்து உருக்குலைந்து போனதாகவும், பல பயணிகள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டதாகவும் அவர்கள் மேலும் கூறினர்.

உடல் உறுப்புகள் சிதைந்த நிலையில் உயிருக்குப் போராடியவர்களைப் போலிசாரும் மீட்புக் குழுவினரும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும் இந்த விபத்தில் 10 பேர் பலியாகியதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

25 பேர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்தக் கோர விபத்தால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.