பிரச்சினைகள் குறித்து வெளிப்படையாக விவாதிக்க தயார் என்கிறார் பிரதமர்

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் ஆக்கபூர்வமான விவாதங்கள் நடைபெற எதிர்க்கட்சிகள் முழு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் எனப் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடாளுமன்றத்தில் அனைத்துப் பிரச்னைகள் குறித்தும் வெளிப்படையாக விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளது என்றார்.

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. டிசம்பர் 13ஆம் தேதி வரை நடைபெற உள்ள இக்கூட்டத் தொடரில் 27 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் கூட்டத் தொடருக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசினார் பிரதமர் மோடி. 

அப்போது, நாடாளுமன்றத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் மிகச் சரியான முறையில் தங்கள் பங்களிப்பை அளிக்க வேண்டும் என்றும் அனைவரின் எதிர்பார்ப்பும் இதுதான் என்றும் அவர் தெரிவித்தார்.

காஷ்மீரில் மத்திய அரசு அண்மையில் மேற்கொண்ட நடவடிக்கை குறித்தும், நாட்டில் நிலவும் பொருளாதார மந்தநிலை, வேலையின்மை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

வருமான வரி மற்றும் நிதிச் சட்டம், குடியுரிமை மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 

பல்வேறு முக்கியப் பிரச்சினைகள் மற்றும் மசோதாக்கள் விவாதத்துக்கு வருவதால் 20 நாட்கள் நடைபெறும் இந்தக் கூட்டத்தொடர் விறுவிறுப்பாக நடந்தேறும் என எதிர்பார்க்கலாம் என்று அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.