பாஜக அரசு தோல்வி அடைந்துவிட்டது: மம்தா பானர்ஜி

கோல்கத்தா: பொருளாதாரத்தைச் சீரமைத்து நாட்டை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு வருவதில் மத்தியில் ஆளும் பாஜக அரசு தோல்வி அடைந்துவிட்டதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், குடியுரிமை திருத்த  மசோதாவானது சொந்த நாட்டு  மக்களை அகதிகளாக்கும் என அதிருப்தி தெரிவித்தார். 

ஏர் இந்தியா உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களைச் சீரமைத்து நல்ல நிலைக்குக் கொண்டு வருவதற்குப் பதிலாக அவற்றை விற்பனை செய்யவே மத்திய அரசு ஆர்வமாக உள்ளது என்றும் மம்தா சாடினார்.

“வங்காள மக்களைச் சட்டபூர்வ குடிமக்கள் பட்டியலிலிருந்து நீக்கி அவர்களைச் சொந்த நாட்டிலேயே அகதிகளாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தபின் அகதிகளுக்குக் குடியுரிமை கிடைக்க வழி செய்வோம்.  அவர்கள் ஆறாண்டுகள் இந்நாட்டில் தங்கியிருக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கவில்லை,” என்றார் மம்தா.

நடப்பு நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடரில் குடியுரிமை திருத்த மசோதாவைக் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.  இதற்கு முதல்வர் மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.