சுடச் சுடச் செய்திகள்

கல்வி மேல் காதல்; 105 வயதில் நான்காம் வகுப்புத் தேர்வு எழுதி அசத்தல்

கேரளாவில் 105 வயதுடைய பகீரதி அம்மா என்பவர் நான்காம் வகுப்பு தேர்வு எழுதி கேட்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

 மூன்றாம் வகுப்பு படிக்கும்போதே தாயாரை இழந்த பகீரதி அம்மாவுக்கு, அதற்கு மேல் படிக்க இயலாமல் போனது.

இளம் வயதிலேயே திருமணமான அவருக்கு ஆறு பிள்ளைகள். சில ஆண்டுகளில் கணவரும் இறந்துபோக, ஆறு பிள்ளைகளையும் ஆளாக்கினார் பகீரது அம்மா. ஆனால், தொடர்ந்து படிக்க இயலாமல் போனது அவருக்கு மன வருத்தத்தை அளித்து வந்தது.

தற்போது நூற்றாண்டு கடந்து வாழும் அவருடைய ஆசை என்ன என்று பிள்ளைகள் கேட்டபோது, நின்று போன தன் படிப்பைத் தொடர வேண்டும் என்று அவர் கூறினார்.

அவரை மீண்டும் படிக்க வைத்து ஆசையை நிறைவேற்ற கேரள மாநில எழுத்தறிவு மிஷனில் இணைத்தனர். இந்த மிஷன் வயதானவர்களுக்கு கல்வி கற்றுக்கொடுக்க கேரள அரசு உருவாக்கிய அமைப்பு. 

பகீரதி அம்மா நான்காம் வகுப்புப் பாடங்களைப் படித்ததுடன் நில்லாமல் மூன்று பாடங்களில் தேர்வையும் எழுதினார்.

அவருக்கு உதவியாக இருந்த வசந்த குமார் என்பவர் “100 வயதைக் கடந்தாலும் அவருடைய ஞாபகத் திறனும், கண் பார்வையும் மிகத் தெளிவாக உள்ளது. அவரே தேர்வு எழுதினார். இடையே முடியாத போது அவரின் கடைசி மகள் உதவினார். கடினமாக இருந்தாலும்  சுற்றுச்சூழல் , கணிதம், மலையாளம் என மூன்று தேர்வுகளையும் எழுதி முடித்துள்ளார், ” என்று கூறினார்.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity