காஷ்மீரில் 5,000 பேரை கைது செய்துள்ளதாக அரசு தகவல்

புதுடெல்லி: காஷ்மீர் பள்ளத்தாக்கில் அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் நோக்கத்துடன் 5,000க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

நேற்று முன்தினம் மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி மாநிலங்களவையில் இத்தகவலை வெளியிட்டார்.

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு உரிமை ரத்து செய்யப்பட்டதை அடுத்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும், பாதுகாப்புப் படையினர் மீது கல்வீசித் தாக்குதல் நடத்துவோர், அரசியல் பிரமுகர்கள், பிரிவினைவாதிகள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

“காஷ்மீர் பள்ளத்தாக்கில் அசம்பாவிதங்களைத் தவிர்க்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதையடுத்து அங்கு 5,161 பேர் கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர். இவர்களில் கல்வீச்சில் ஈடுபடும் 218 பேரும் அடங்குவர்,” என்று மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி மேலும் தெரிவித்தார்.

காஷ்மீருக்கான சிறப்பு உரிமை ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்ததற்குக் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. இதையடுத்து போராட்டங்கள் வெடித்தன. 

மத்திய அரசின் எச்சரிக்கையை மீறி இவ்வாறு போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது.

இதற்கிடையே காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா கைது செய்யப்பட்டது குறித்து நாடளுமன்றத்திற்கு ஏன் தகவல் தெரிவிக்கவில்லை? என திமுக கேள்வி எழுப்பி உள்ளது. 

நேற்று முன்தினம் மக்களவையில் பேசிய அக்கட்சி எம்பி தயாநிதி மாறன், எந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினரைக் கைது செய்தாலும் அதுகுறித்து நாடாளுமன்றத்துக்குத் தகவல் தெரிவிக்க வேண்டியது மத்திய அரசின் கடமை என்றார்.

“சபாநாயகருக்கும் மக்களவைக்கும் கைது நடவடிக்கை குறித்து உரிய முறையில் தகவலைத் தெரியப்படுத்த வேண்டிய மத்திய அரசு 3 மாதங்களுக்கு மேலாகியும் பரூக் அப்துல்லா கைதானது குறித்து தகவல் தெரிவிக்கவில்லை. 

“இது நாடாளுமன்ற விதிகளை மீறும் செயல் மட்டுமல்ல, மக்களவை சபாநாயகரை அவமதிக்கும் செயலாகும்.

“இத்தகைய செயல்பாடுகள் மக்களவையின் மாண்பைக் குலைக்கும். இதற்கு திமுக கண்டனம் தெரிவிக்கிறது,” என்றார் தயாநிதி மாறன்.

இதற்கிடையே பாதுகாப்புத் துறை சார்பாக அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றக் குழுவில் பரூக் அப்துல்லாவின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இக்குழுவுக்கு பாதுகாப்பு அமைச்சின் அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமை ஏற்றுள்ளார்.

81 வயதான பரூக் அப்துல்லா, கடந்த நூறு நாட்களுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவர் கைது செய்யப்பட்டது குறித்து மத்திய அரசு முரண்பட்ட தகவல்களைத் தெரிவித்து வருவதாக எதிர்க்கட்சிகள் சாடியுள்ளன.

இதே போல் காஷ்மீர் முன்னாள் முதல்வர்களான ஓமர் அப்துல்லா, மெஹ்பூபா முஃப்டி ஆகியோரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

அனைவர் மீதும் பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.