ஆட்சி அமைப்பது குறித்து பிரதமரிடம் ஏதும் பேசவில்லை என சரத்பவார் திட்டவட்டம்

ஆட்சி அமைப்பது குறித்து பிரதமரிடம் ஏதும் பேசவில்லை என சரத்பவார் திட்டவட்டம்

1 mins read
2a643eac-2ec0-4e7e-a9fe-a7fc9090d6d0
பிரதமர் மோடியை நேரில் சந்தித்தபோது மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது தொடர்பாக தாம் ஏதும் பேசவில்லை என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார். கோப்புப்படம்: ஊடகம் -

புதுடெல்லி: பிரதமர் மோடியை நேரில் சந்தித்தபோது மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது தொடர்பாக தாம் ஏதும் பேசவில்லை என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் பிரதமரைச் சந்தித்த அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்துப் பிரதமரிடம் தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டார்.

"மகாராஷ்டிர விவசாயிகள் கடும் துன்பத்தில் உள்ளனர். அவர்களின் துயர் துடைக்க உதவ வேண்டும். அவ்வாறு செய்தால் பிரதமருக்கு என்றும் நன்றி உள்ளவனாக இருப்பேன் என்று பிரதமர் மோடியிடம் கேட்டுக்கொண்டேன். மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது தொடர்பாக பிரதமருடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை," என்றார் சரத்பவார்.

இதற்கிடையே மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய சிவசேனா எம்பி சஞ்சய் ராவத், டிசம்பர் 1ஆம் தேதிக்குள் மகாராஷ்டிராவில் நிலையான ஆட்சி அமைக்கப்படும் என்றும் அதற்கான பணிகள் நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

"ஆட்சி அமைப்பது தொடர்பாக காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா ஆகிய மூன்று கட்சியினரும் மும்பையில் ஆலோசிக்க உள்ளோம்," என்றார் சஞ்சய் ராவத்.

மகாரா‌ஷ்டிரா அரசியல் களத்தில் பரபரப்பு நீடித்து வருகிறது.