அதிர்ஷ்டக் குலுக்கில் கோடீஸ்வரரான அபுதாபி வாழ் இந்தியர்

அபுதாபியில் மென்பொருள் நிறுவனம் நடத்தி வரும் இந்தியர் ஒருவருக்கு ‘டிடிஎஃப்’ எனப்படும் ‘துபாய் டியூட்டி ஃபிரீ’ அதிர்ஷ்டக் குலுக்கில் ஒரு  மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசு கிடைத்துள்ளது. வெற்றிபெற்ற பரிசுச் சீட்டு எண் 0666. 

இந்தியாவின் பெங்களூருவைப் பூர்வீகமாகக் கொண்ட 48 வயது லூயிஸ் ஸ்டீபன் மார்டிஸ் என்பவர் கடந்த 25 ஆண்டுகளாக குடும்பத்துடன் ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வருகிறார். 

இணையம் வழியாக இந்தப் பரிசுச் சீட்டை வாங்கியதாகக் குறிப்பிட்ட மார்டிஸ், கடந்த சில மாதங்களாக இந்த அதிர்ஷ்டக் குலுக்கு சீட்டுகளை வாங்கிவருவதாகக் குறிப்பிட்டார்.

“இதுவே எனது வாழ்வில் நான் கேட்ட மிக நல்ல செய்தி. என்றாவது ஒருநாள் பரிசு விழும் என்று நம்பியிருந்தேன்,” என்று கூறும் மார்டிஸ் இந்தப் பணத்தை நல்ல காரியங்களுக்கும் செலவிடத் திட்டமிட்டுள்ளார்.

பரிசுத் தொகையில் 10 விழுக்காட்டை அறநிறுவனத்துக்கு நன்கொடையாக வழங்கத் திட்டமிட்டுள்ள அவர், தனது பிள்ளைகளின் படிப்புக்கு இந்தத் தொகை பெரிதும் உதவும் என்றார்.

அவருக்கு 18 வயது மகனும் 14 வயது மகளும் உள்ளனர். 

துபாயில் வசிக்கும் மற்றொரு இந்தியரான ராபர்ட் பீட்டர் மார்ட்டினுக்கு ஏப்ரில்லா டோர்சோடியூரோ மோட்டார்பைக் ஒன்று பரிசாகக் கிடைத்துள்ளது.

அதிர்ஷ்டக் குலுக்கு ஏற்பாட்டாளர்கள் மார்ட்டினைத் தொடர்புகொள்ள இயலாததால் இந்தத் தகவலை இணையத்தில் வெளியிட்டனர்.

துபாய் டியூட்டி ஃபிரீ  நிறுவனம் ‘துபாய் டியூட்டி ஃபிரீ மில்லீனியம் மில்லியனர் அண்ட் ஃபைனஸ்ட் சர்ப்ரைஸ்’ என்ற பெயரில் ஆண்டுதோறும் போட்டி ஒன்றை நடத்தி வருகிறது. இதில், விமானச் சீட்டு எண்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும். தேர்வு செய்யப்படும் அதிர்ஷ்டசாலிக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசாக வழங்குவது வழக்கம். துபாய் விமான சாகச நிகழ்ச்சியின் 3வது நாளில், இந்த போட்டியில் தேர்வு செய்யப்பட்டவர்கள் அறிவிக்கப்படுவார்கள்.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity