புதுடெல்லி: இந்தியாவில் அரசாங்கத் துறைகளில் தில்லுமுல்லுகளும் மோசடிகளும் அறவே இடம்பெறாத வகையில் புத்தாக்க ஏற்பாடுகளைக் காணும்படி நாட்டின் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அலுவலகத்துக்குப் பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்து இருக்கிறார்.
இந்தியா 5 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள பொருளியலைக்கொண்ட நாடாகத் திகழவேண்டும் என்பது இந்திய அரசின் இலக்கு என்றும் அதில் இந்தத் தணிக்கையாளர் அலுவலகம் முக்கியமான பங்காற்ற வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தி உள்ளார்.
மின்னிலக்க உலகத்திற்கு ஏற்ப தலைமைத் தணிக்கையாளர் அலுவலகம் உருமாற வேண்டியிருப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் ஒரு மாநாட்டில் உரையாற்றிய திரு மோடி, அரசாங்கத் துறைகளில் தில்லுமுல்லுகளையும் மோசடிகளையும் தடுப்பதற்குத் தோதான புதுப்புது புத்தாக்கங்களை இந்த அலுவலகம் காணவேண்டும் என்று வலியுறுத்தினார்.
ஆளுமைத் திறனையும் ஆற்றலையும் மேம்படுத்துவதில் இந்த அலுவலகம் முக்கிய பங்காற்ற முடியும் என்றார் அவர்.
இதனிடையே, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கேள்வி நேரத்தின்போது அமைச்சர்கள் அவையில் இல்லாமல் போய்விடுகிறார்கள் என்பதால் பிரதமர் மோடி அவர்கள் மீது மிகவும் அதிருப்தியுடனும் கோபத்துடனும் இருப்பதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்து இருக்கின்றன.
திரு மோடி சில நாட்களுக்கு முன் அமைச்சர்களை நேரே சந்தித்து இந்த விவகாரத்தைக் கிளப்பியதாகத் தெரிகிறது.
மக்கள் நலன் தொடர்பாக மத்திய அரசாங்கம் எடுத்து வரும் பல முடிவுகள் பற்றிய கருத்துகளை அமைச்சர்களின் பதில்களின் வழியாக எல்லாரும் பெறமுடியும் என்பதால் நாடாளுமன்றத்தில் கேள்வி நேரம் என்பது மிக முக்கியமான ஒரு தருணம் என்று பிரதமர் மோடி அமைச்சர்களிடம் தெளிவுப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.