சென்னை: பெங்களூருவில் இப்போது சிறைத்தண்டனை அனுபவித்து வரும் சசிகலா விடுதலையானதும் அவர் தலைமை தாங்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சிக்கு வசந்தகாலம் பிறக்கும் என்று பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணி சுவாமி ஆரூடம் கூறி இருக்கிறார்.
அதிமுகவில் இருப்பவர்கள், சசிகலா வந்ததும் அவரின் கட்சியில்தான் இணைவார்கள் என்று தான் எதிர்பார்ப்பதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சுவாமி கூறினார்.
நடிகர்கள் அரசியலுக்கு வருவது பற்றியும் நடப்பு அரசியல் நிலவரம் குறித்தும் அவர் கருத்து கூறினார். திரைப்பட நடிகர்களைக் கூத்தாடிகள் என்று வர்ணித்த சுவாமி, தமிழ்நாட்டுக்காக அவர்களால் எதையுமே செய்ய முடியாது என்று குறிப்பிட்டார்.
அரசியல் வெற்றிடத்தை ரஜினிகாந்த் நிரப்புவாரா என்பது பற்றி கருத்துரைத்த சுவாமி, ரஜினி பல தடவை அரசியலுக்கு வரப்போவதாக தெரிவித்தும் இதுவரை ஒன்றும் நடக்கவில்லை என்றார்.
ரஜினி புதிய திரைப்படத்தை விரைவில் வெளியிட இருப்பதால் விளம்பரத்திற்காக அவர் அரசியல் கருத்துகளைத் தெரிவித்து வரக்கூடும் என்றும் சுவாமி கூறினார்.
ரஜினி-கமல் சேர்ந்து மக்களுக்கு நல்லது செய்யப்போவதாக தெரிவித்துள்ளது பற்றி கருத்துரைத்த சுவாமி, இது எல்லாம் தமக்கு அலுத்துப்போய்விட்ட சங்கதி என்றார்.
“அமமுக தலைவியாக இருக்கும் சசிகலாவுக்கு விதிக்கப்பட்டு உள்ள சிறைத்தண்டனை இன்னும் ஓராண்டுக்குள் முடிந்துவிடும். கட்சியைத் திறம்பட நடத்துவதற்கான ஆற்றல் சசிகலாவிடம் இருக்கிறது. அவர் விடுதலையானதும் அதிமுகவினர் நிச்சயம் சசிகலா கட்சியில்தான் இணைவார்கள்,” என்று சுப்பிரமணிய சுவாமி தெரிவித்தார்.
அமமுக கட்சியின் பொதுச் செயலாளராக இருந்து வரும் டிடிவி தினகரன் சென்னை ஆர்கே நகர் இடைத்தேர்தலுக்குப் பிறகு அரசியலில் சாதனை எதையும் நிகழ்த்தாமல் இருப்பதால் அவருடைய கட்சி கலகலத்துப் போய்விட்டது.