தூத்துக்குடி: பள்ளிக்கூடத்துக்கு ஒழுங்காக வராததைக் கண்டித்து ஒரு மாணவிக்கு ஓர் ஆசிரியர் கொடுத்த தண்டனை பெரும் பிரச்சினையாகிவிட்டது.
தூத்துக்குடியில் விவிடி மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்1 படித்து வந்த மரிய ஐஸ்வர்யா என்ற 16 வயதுப் பெண் இரண்டு நாட்கள் பள்ளிக்குப் போகவில்லை.
அதனால் அந்த மாணவி, மாணவர்கள் முன்னிலையில் 150 தோப்புக்கரணம் போடவேண்டும் என்றும் பள்ளிக்கூடத்தை ஒரு முறை சுற்றி வரவேண்டும் என்றும் ஆசிரியர் ஒருவர் தண்டனை விதித்து இருக்கிறார். அதனால் மனமுடைந்த அந்த மாணவி வீட்டில் தன்னைத் தானே மாய்த்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் கோபமடைந்து பள்ளிக்கூடத்தில் திரண்ட உறவினர்களும் பொதுமக்களும் மாணவியின் மரணத்துக்குக் காரணமான ஆசிரியர், தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியதை அடுத்து போலிஸ் அங்கு விரைந்தது.
அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியை கனகரத்தினமணி கைதானார். ஞானபிரகாசம் என்ற ஆசிரியர் தலைமறைவாகிவிட்டார். அவரை போலிஸ் தேடுகிறது.