‘சித்தி கொடுமை’ என்ற பெயரால் அடி, உதை, சூடு போன்றவற்றையெல்லாம் தாங்கிக்கொண்ட ஏழு வயது தீப்தி ஸ்ரீயை, கொடுமையின் உச்சமாக, கொலை செய்து சாக்குப் பையில் கட்டி ஏரிக்குள் வீசிய சம்பவம் ஆந்திராவில் நிகழ்ந்துள்ளது.
தனக்கென்று ஒரு மகன் பிறக்கும் வரை தீப்தியை அவளது தந்தையின் இரண்டாவது மனைவியான சந்தான குமாரி நன்றாகத்தான் பார்த்துக்கொண்டிருந்தார் என்கின்றனர் அக்கம்பக்கத்தினர்.
ஆந்திர மாநிலம், காக்கிநாடாவுக்கு அருகில் உள்ள பகடாலபேட்டையைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். அவருடைய முதல் மனைவி சத்தியவேணிக்குப் பிறந்த மகள் தீப்தி ஸ்ரீ.
மூன்றாண்டுகளுக்கு முன்னர் மனைவி சத்தியவேணி திடீரென்று மரணமடைந்ததையடுத்து ஈராண்டுகளுக்கு முன்பு அதே ஊரைச் சேர்ந்த சந்தான குமாரி என்பவரை சதீஷ்குமார் திருமணம் செய்துகொண்டார்.
அவர்களுக்கு ஒரு வயதில் மகன் இருக்கிறான்.
மகன் பிறந்த பிறகு சந்தான குமாரியின் நடத்தையில் மாற்றம் தெரிய ஆரம்பித்ததாகவும் சிறுமி தீப்தி ஸ்ரீயை தினமும் அடித்து கொடுமை செய்வதை சந்தான குமாரி வழக்கமாக்கிக்கொண்டார் எனவும் கூறப்படுகிறது.
அவ்வப்போது தீப்தி ஸ்ரீக்கு சந்தான குமாரி சூடு வைத்ததாகவும் கூறப்படுகிறது.
பேத்தி தீப்தி ஸ்ரீ படும் சிரமங்களைப் பார்த்த சதீஷ்குமாரின் தாயார் பேபி, தீப்தி ஸ்ரீயை தன்னுடன் அழைத்துச் சென்று வளர்த்து வந்தார்.
தீப்தி ஸ்ரீயின் பராமரிப்பு செலவுகளுக்காக சதீஷ்குமார் மாதந்தோறும் பணம் கொடுக்கவேண்டுமென்று தாய் பேபி கேட்டுக்கொண்டார்.
இதன் தொடர்பில் சதீஷ்குமார், சாந்தகுமாரி இடையே ஏற்பட்ட பிரச்சினைகளின் காரணமாக, தீப்தி ஸ்ரீயைப் பராமரிப்பதற்குத் தேவையான பணத்தைக் கொடுக்க இயலாத நிலை சதீஷ்குமாருக்கு ஏற்பட்டது.
இந்த நிலையில் தீப்தி ஸ்ரீயின் பராமரிப்புச் செலவுக்குப் பணம் கேட்டு கிராம பஞ்சாயத்தில் முறையிட்டார் பாட்டி பேபி. மாதந்தோறும் சதீஷ்குமார், 2,000 ரூபாயை தாயார் பேபியிடம் கொடுக்க வேண்டும் என்று ஆணையிட்டது கிராம பஞ்சாயத்து.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமையன்று தீப்தி ஸ்ரீ படிக்கும் பள்ளிக்குச் சென்ற சந்தான குமாரி, தீப்தி ஸ்ரீயை பள்ளியிலிருந்து அழைத்துச் சென்றார். அப்போது முதல் சிறுமியைக் காணவில்லை.
மகளைக் காணவில்லை என்று சதீஷ்குமார் அளித்த புகாரின்பரிேல் காக்கிநாடா போலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தனர்.
சந்தேகத்தின் அடிப்படையில் சந்தான குமாரியை விசாரித்ததில், தீப்தி ஸ்ரீயை அழைத்துச் சென்று கொலை செய்து சாக்குமூட்டையில் கட்டி அருகிலுள்ள ஏரியில் உடலை அவர் வீசியது தெரியவந்தது.
ஏரியில் வீசப்பட்ட சிறுமி தீப்தி ஸ்ரீ உடலை மீட்ட போலிசார், அதனை உடற்கூறு ஆய்வுக்காக காக்கிநாடா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிறுமியைக் கொலை செய்த குற்றத்துக்காக சந்தான குமாரியை போலிசார் கைதுசெய்துள்ளனர்.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity