பாகிஸ்தான் கிரிக்கெட் ஆட்டக்காரர்களை ஏற்றிச் சென்றதற்காக எந்தவொரு கட்டணத்தையும் வாங்க மறுத்த இந்திய காரோட்டி பற்றி சமூக ஊடகங்களில் புகழுரைகள் பரவி வருகின்றன.
ஆஸ்திரேலியாவில் நிகழ்ந்த இச்சம்பவம் குறித்து ஏபிசி வானொலி படைப்பாளரான எலிசன் மிச்சேல் என்னும் பெண்மணி விவரித்தார்.
ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கடந்த வாரம் நடைபெற்றது. அதில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியா சென்ற பாகிஸ்தான் ஆட்டக்காரர்கள் பிரிஸ்பேன் நகரில் ஹோட்டடல் ஒன்றில் தங்கி இருந்தனர்.
ஷஹீன் ஷா அஃப்ரிடி, யாசிர் ஷா, நசீம் ஷா ஆகிய ஆட்டக்காரர்கள் இந்திய உணவகம் ஒன்றில் இரவு உணவு சாப்பிட வாடகை காரில் சென்றனர். அந்த காரை ஓட்டிய இந்தியர், கிரிக்கெட் ஆட்டக்காரர்களிடம் கட்டணம் வாங்க மறுத்துவிட்டார். இது அம்மூவரையும் இன்ப அதிர்ச்சியில் மூழ்கடித்தது.
அந்த நற்செயலுக்குப் பதிலளிக்கும் விதமாக ஓட்டுநரை தங்களோடு இரவு உணவுக்கு அழைத்துச் சென்று கௌரவப்படுத்தினர். அப்போது ஓட்டுநருடன் எடுத்த புகைப்படங்களை சமூக ஊடகங்களில் அவர்கள் பதிவேற்றினர். இணையவாசிகள் ஓட்டுநரையும் கிரிக்கெட் ஆட்டக்காரர்களையும் பாராட்டி வருகின்றனர்.
முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் பாகிஸ்தான் மண்ணைக் கவ்வியது. இப்போட் டியைக் காண எலிசன் மிச்சேல் டாக்சி ஒன்றில் சென்றார். அந்த டாக்சி ஓட்டிதான் கௌரவத்திற்குரியவர் என்பதை அப்போது அவர் அறிந்துகொண்டார்.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity