புதுடெல்லி: மகாராஷ்டிராவில் அடுத்த கட்டமாக சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்க நேற்று ஆளுநர் பகத் சிங்கை சந்தித்து உரிமை கோர இருப்பதாக தகவல் வெளியானது.
மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கூட்டணி சுழற்சி முறையில் முதல்வர் பதவியை பகிர்ந்து கொள்ளாது என்று இதுவரை வெளியான தகவல்களில் இருந்து இது தெரியவந்துள்ளது. காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளில் இருந்து ஒருவர் துணை முதல்வராகிறார்.
நேற்று மாலை 6.30 மணிக்கு யார் முதல்வர் என்ற செய்தியை சிவ சேனா கூட்டணி அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. கடந்த வாரம் வெளியான கூட்டணி பேச்சுவார்த்தையில் உத்தவ் தாக்கரே முதல்வரார் என்றும் ஐந்து ஆண்டுகள் அவரே முதல்வராக நீடிப்பார் என்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்து இருந்தார். காங்கிரஸ், தேசிவாத காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தி வந்தன. இதற்கான குறைந்தபட்ச பொது திட்டத்தை தயாரித்து வந்தனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தக் கூட்டணி ஆட்சி அமைக்க ஆளுநரை சந்தித்து உரிமை கோரும் என்று கூறப்பட்ட நிலையில் , சனிக்கிழமை காலை பாஜக ஆட்சி அமைத்தது. தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும், அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவி ஏற்றனர்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்துக் கொண்டு பாஜகவுடன் அஜித் பவார் கைகோர்த்து ஆட்சிக்கு ஆதரவு கொடுத்தார். ஆனால், அது செல்லாது என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் தெரிவித்தார். சிவ சேனா கூட்டணிக்கு ஆதரவு கொடுப்பதற்காக எம்.எல்.ஏ.களிடம் பெறப்பட்ட கடிதத்தை சமர்ப்பித்து அஜித் பவார் ஆதரவு தெரிவித்ததாக பின்னர் கூறப்பட்டது.
தற்போது தங்களிடம் 53 எம்.எல்.ஏ.க்கள் இருப்பதாக சரத் பவார் தரப்பு கூறி வருகிறது. பாஜக ஆட்சிப் பொறுப்பேற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தில் சிவ சேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தொடுத்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இன்று மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே நேற்று காலை முதல்வர் தேவேந்திர பட்னாவிசை அஜித் பவார் சந்தித்துப் பேசினார். எந்த அரசு நிகழ்வுகளிலும் அஜித் பவார் பங்கேற்கவில்லை.
இது சந்தேகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் துணை முதல்வர் பதவியை அஜித் பவார் ராஜினாமா செய்தார்.
இவரைத் தொடர்ந்து முதல்வர் தேவேந்திர பட்னாசும் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். தன்னுடன் 30 எம்.எல்.ஏ.க்கள் வருவார்கள் என்று அஜித் பவார் எதிர்பார்த்தார். ஆனால், இறுதியில் 12 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே ஆதரவு கொடுத்துள்ளனர்.
தனக்கு பக்கபலமாக இருந்த தனஞ்செய் திரும்பவும் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு சென்றதால், அஜித் பவார் ஏமாற்றம் அடைந்தார். இதனால் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது. பாஜக அதன் பெரும்பான்மையை நிரூபிக்க இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டதால் பாஜக அரசுக்கு நெருக்கடி ஏற்ப்ட்ட நிலையில் தேவேந்திர பட்னாசும் அஜித் பவாரும் பதவி விலகியுள்ளனர்.
சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்த கூட்டணிக்கு பெரும்பான்மை இருப்பதாக கூறி, எம்எல்ஏக்கள் ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் கொடுத்துள்ளனர். நேற்று இரவு நட்சத்திர ஓட்டலில் அந்த எம்எல்ஏக்களின் அணிவவகுப்பையும் நடத்தி தங்கள் பலத்தை காண்பித்தனர்.
எனவே இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும்போது தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பாஜக அரசு எதிர்க்கட்சிகளால் தோற்கடிக்கப்படும் நிலை ஏற்பட்டது. எனவே, வாக்கெடுப்பை சந்தித்து தோல்வியை சந்திப்பதற்கு பதில், அவர் பதவியை ராஜினாமா செய்யலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், துணை முதல்வர் அஜித் பவார் நேற்று பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பட்னாவிஸ் , பதவியை ராஜினாமா செய்திருப்பதாக அறிவித்தார். முன்னதாக மராட்டியத்தில் பெரும்பான்மை இல்லாத நிலையில் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித் பவார் ஆதரவுடன் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகப் பதவியேற்றார்.
ஆனால் உச்சநீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு மகாராஷ்டிரா அரசியலில் எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்தியது.
நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா கட்சிகள் வரவேற்பு தெரிவித்தன. தீர்ப்பை தொடர்ந்து மும்பை இல்லத்தில் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிசுடன் துணை முதலமைச்சர் அஜித் பவார் ஆலோசனை நடத்தினார்.
நீதிமன்ற தீர்ப்புக்குப் பின்னர் பேசிய சிவசேனா கட்சி எம்.பி சஞ்சய் ராவத், அஜித் பவார் ராஜினாமா செய்துள்ளதாகவும் அவர் தற்போது தங்களுடன் இருப்பதாகவும் சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே மராட்டியத்தின் முதல்வராக 5 ஆண்டுகள் இருப்பார் எனவும் தெரிவித்தார்.
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தின் சட்டசபை இடைக்கால சபாநாயகராக பாஜகவை சேர்ந்த எம்.எல்.ஏ. காளிதாஸ் கொலம்ப்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஆளுநர் மாளிகை சென்று பதவியேற்க உள்ள காளிதாஸ், அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் இன்று பதவிப் பிரமாணம் செய்து வைப்பார் என தெரிகிறது.