புதுடெல்லி: ஐ.எஸ். ஆதரவு பயங்கரவாதிகள் மூவர் வெடிகுண்டுகளுடன் பிடிபட்டதால் மிகப்பெரிய நாசவேலை தவிர்க்கப்பட்டு இருப்பதாக டெல்லி போலிஸ் துணை கமிஷனர் தெரிவித்துள்ளார்.
டெல்லி மற்றும் அசாமில் ஐ.எஸ். வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக கடந்த வாரம் உளவுத்துறை ரகசிய தகவலை மத்திய அரசுக்கு அனுப்பியது. குறிப்பாக 3 பேரை குறிப்பிட்டு அவர்கள் தாக்குதல் நடத்துவதற்கு தயாராகி வருவதாக உளவுத்துறை எச்சரித்தது. இதையடுத்து டெல்லி போலிசாரும், அசாம் மாநில போலிசாரும் ஒருங்கிணைந்து நேற்று அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர்.
அசாம் தலைநகர் கவுகாத்தியில் நடந்த சோதனையில் 3 பயங்கரவாதிகள் அசாம் மாநிலத்தில் கைது செய்யப்பட்டனர். அவர்களது பெயர் முகாதீர் இஸ்லாம், ரஞ்சித் இஸ்லாம், ஜமீல்லூயிட் என்று தெரிய வந்துள்ளது. இவர்கள் மூவரும் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் பயங்கர ஆதரவாளர்களாக இருப்பவர்கள். பெங்களூரில் உள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் இவர்கள் பயிற்சி பெற்றதாக தெரிய வந்துள்ளது. அவர்கள் மூலம்தான் குண்டு வெடிப்பை நடத்துவதற்கான முயற்சிகளை மூவரும் மேற்கொண்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
கைதான 3 பயங்கரவாதிகளின் வீடுகளில் போலிசார் சோதனை நடத்தினார்கள். அப்போது வெடிகுண்டுகள், ஒரு கிலோ வெடிபொருள் மற்றும் வெடிகுண்டு தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவை அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன. பயங்கரவாதிகள் மூவர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது. அசாம் மாநிலம் கோல்பாரா மாவட்டத்தில் நடைபெற்று வரும் ஆன்மிக நிகழ்ச்சியை சீர்குலைக்க 3 பயங்கரவாதிகளும் வெடி குண்டுகளுடன் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தனர். அதற்கு முன்னதாக அவர்கள் பிடிபட்டதால் அசாம் மாநிலத்தில் நடக்க இருந்த குண்டு வெடிப்பு முறியடிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் டெல்லியில் மார்க்கெட் பகுதியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்ததும் தெரிய வந்தது.
இவர்களுடன் வேறுயார் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்று விசாரணை நடைபெற்று வருகிறது.