சென்னைக்குச் சென்றுகொண்டிருந்த ரயிலின் கழிவறையில் மகப்பேறு; உதவிய துப்புரவு ஊழியர்

சென்னைக்குச் சென்றுகொண்டிருந்த ரயிலின் கழிவறையில் மகப்பேறு; உதவிய துப்புரவு ஊழியர்

2 mins read
34a5b8c2-b75d-460a-a747-bc6d0d951614
-

சென்னையை நோக்கிச் சென்றுகொண்டிருந்த கங்கா- காவேரி அதிவிரைவு ரயிலில் பயணம் செய்த பீகார் பெண்ணுக்கு ஓடும் ரயிலின் கழிவறையிலேயே குழந்தை பிறந்தது.

ரயில்வே பாதுகாப்புப் படையினர் மற்றும் துப்புரவாளர்களின் உதவியுடன் தாயும் சேயும் நல்லபடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இன்று (நவம்பர் 27) காலை டோர்னாக்கல்-கம்மம் பகுதியில் ரயில் சென்றுகொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

பிங்கி தேவி என்று அறியப்படும் 25 வயதுப் பெண் பீகாரில் உள்ள சாப்ரா பகுதியில் வசிக்கிறார்.

ரயில் ஓடிக்கொண்டிருந்தபோது அதிகாலை 5.40 மணியளவில் கழிவறைக்குச் சென்ற தேவிக்கு மகப்பேற்று வலி ஏற்பட்டது.

டோர்னாக்கல் நிலையத்தைத் தாண்டி ரயில் சென்றுகொண்டிருந்தபோது கழிவறையிலேயே தேவிக்கு பெண் குழந்தை பிறந்தது.

தேவியையும் அவரது பெண் குழந்தையையும் துப்புரவு பணிபுரியும் பெண் ஒருவர் கண்டார். உடனடியாக ரயில்வே பாதுகாப்பு கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் அவர் தகவல் அளித்தார்.

விரைந்து செயல்பட்ட ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரிகள் பெண் போலிசான ஷகிலாவுடன் தொண்டூழிய அமைப்பைச் சேர்ந்த பெண்களையும் செயலில் இறக்கினர்.

ரயில் கம்மம் நிலையத்தை அடைந்ததும் பிள்ளைபெற்ற பெண்ணையும் அவரது பிஞ்சுக் குழந்தையையும் ரயிலிலிருந்து பத்திரமாக இறக்கினர்.

அவசர உதவி வாகன துணை மருத்துவர்கள் அவ்விருவருக்கும் முதலுதவி செய்தனர். பின்னர் தாயும் சேயும் மாவட்ட தலைமை மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.

கம்மம் ரயில்வே பாதுகாப்புப் படை கண்காணிப்பாளர் கே.மதுசுதன் தாயையும் சேயையும் மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தார்.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity

குறிப்புச் சொற்கள்