300 செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவி இஸ்ரோ சாதனை: பிரதமர் மோடி பாராட்டு

300 செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவி இஸ்ரோ சாதனை: பிரதமர் மோடி பாராட்டு

1 mins read

ஸ்ரீஹரிகோட்டா: இந்திய விண்வெளி ஆய்வுக் கழகமான இஸ்ரோ 300க்கும் அதிகமான செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தி சாதனை படைத்துள்ளது.

இதையடுத்து இஸ்‌ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

கார்ட்டோசாட்-3 என்ற செயற்கைக்கோளை பிஎஸ்எல்வி-சி47 ராக்கெட் உதவியுடன் நேற்று காலை விண்ணில் செலுத்தியது இஸ்ரோ.

இதையடுத்து இஸ்ரோ விஞ்ஞானிகள் மத்தியில் உரையாற்றிய அதன் தலைவர் கே. சிவன், கார்ட்டோசாட்-3 மற்றும் அதனுடன் செலுத்தப்பட்ட அமெரிக்காவின் 13 நானோ செயற்கைக் கோள்கள் புவி வட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதாகத் தெரிவித்தார்.

கார்ட்டோசாட்-3 செயற்கைக்கோள் 1625 கிலோ எடை கொண்டது என்றும், அதில் மிக நவீன கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் சிவன் தெரிவித்தார்.

எதிர்வரும் மார்ச் மாதத்துக்குள் மேலும் 13 செயற்கைக் கோள்கள் மற்றும் ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இஸ்ரோவின் ஒட்டுமொத்தக் குழுவுக்கும் தமது இதயப்பூர்வ வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.