அகமதாபாத்: கடப்பிதழ் காலாவதியான நிலையில், சாமியார் நித்தியானந்தா தரை வழியாக நேப்பாளம் சென்று, அங்கிருந்து கரீபியன் தீவுக்கு தப்பிச் சென்றகாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து தப்பி ஓடிய நித்யானந்தாவை கண்டுபிடிக்க ‘இன்டர்போல்’ எனப்படும் அனைத்துலக காவல்துறையின் உதவியை நாடுமாறு குஜராத் காவல்துறைக்கு அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரை சேர்ந்த ஜனார்த்தன சர்மா என்பவர் தனது 2 மகள்கள் நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளதாகப் புகார் எழுப்பியுள்ளார்.
இதையடுத்து மகள்களை மீட்க அவர் குஜராத் உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்தார்.
இதற்கிடையே நித்தியானந்தா ஆசிரமத்தில் இருந்து மீட்கப்பட்ட இவரது மற்ற இரு குழந்தைகளிடம் போலிசார் விசாரணை நடத்தினர். அதன் அடிப்படையில் நித்தியானந்தா மீது கடத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், நித்தியானந்தா ஆசிரமத்தில் சிறை வைக்கப்பட்டதாக கூறப்பட்ட லோபமுத்ரா, நந்திதா ஆகியோர் இருவரும் காணொளிப் பதிவு ஒன்றை வெளியிட்டு, தங்களை யாரும் கடத்தவில்லை என விளக்கம் அளித்துள்ளனர்.
தேவைப்பட்டால் நீதிமன்றத்தில் முன்னிலையாக தயார் என்றும், சுய விருப்பத்தின் பேரிலேயே நித்தியானந்தா ஆசிரமத்தில் இருப்பதாகவும் அவர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அவர்கள் இருவரும் கரீபியன் தீவுப்பகுதியில் இருப்பது தெரிய வந்துள்ளது. நித்தியானந்தாவும் அங்குதான் பதுங்கி இருக்க வேண்டும் எனப் போலிசார் சந்தேகிக்கின்றனர்.
இதற்கிடையே ஆட்கொணர்வு மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், நித்தியானந்தாவை கண்டுபிடிக்க ‘இன்டர்போல்’ மற்றும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சின் உதவியை உடனடியாக நாடுமாறு குஜராத் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.