பெங்களூரு: கர்நாடகாவில் 17 எம்எல்ஏக்கள் பதவி விலக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, முதல்வர் எடியூரப்பா ஆகியோர்தான் காரணம் என அம்மாநில முன்னாள் முதல்வர் சித்தராமையா குற்றம்சாட்டி உள்ளார்.
ராணிபென்னூர் தொகுதியில் நடைபெற்ற காங்கிரஸ் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், கர்நாடகாவில் எடியூரப்பா முதல்வராக இருந்தபோது பள்ளி குழந்தைகளுக்கு இலவச மிதிவண்டி அளிக்கப்பட்டது தவிர வேறு நலத்திட்டங்கள் எதையும் செயல்படுத்தவில்லை என்றார்.
எடியூரப்பாதான் பாஜகவின் ‘ஆபரேஷன் தாமரை’யின் பிதாமகன் என்று குறிப்பிட்ட சித்தராமையா, கடந்த 2008ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 7 எம்எல்ஏக்களை இழுத்தது போலவே, இப்போது 17 எம்எல்ஏக்களை எடியூரப்பா பாஜக பக்கம் இழுத்துள்ளதாகச் சுட்டிக்காட்டினார்.
“நான் முதல்வராக இருந்தபோது, விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்தேன். எனது சொந்தப் பணத்தை எடுத்து வந்து கடனை தள்ளுபடி செய்யவில்லை.
“மக்களுடைய பணத்தை அவர்களுக்காக செலவு செய்து விவசாயக் கடனை தள்ளுபடி செய்தேன். ஆனால் முதல்வர் எடியூரப்பா இது போன்று எதுவும் செய்யவில்லை,” என்றார் சித்தராமையா.
கர்நாடகத்தில் நடைபெறும் 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் தவறு செய்தவர்களுக்குத் தக்க பாடத்தை மக்கள் புகட்டுவார்கள் என்று குறிப்பிட்ட அவர், இடைத்தேர்தலை காங்கிரஸ் கட்சி விரும்பவில்லை என்றார்.
“கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் 17 எம்எல்ஏக்களை சபாநாயகராக இருந்த ரமேஷ்குமார் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது.
“இப்போது பாஜக பக்கம் சாய்ந்துள்ள எம்எல்ஏக்கள் தோல்வியடைவது உறுதி. பாஜகவை வீழ்த்துவதற்கான அனைத்தையும் நாங்கள் செய்வோம்,” என்றார் சித்தராமையா.