மும்பை: மகாராஷ்டிராவில் அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலை அடுத்து ஏறக்குறைய ஒரு மாத காலமாக நடந்து வந்த அரசியல் நாடகம் நேற்று முடிவுக்கு வந்தது.
சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் மூன்று கட்சிகளும் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கின்றன. புதிய அமைச்சரவை நேற்று இரவு பதவி ஏற்கவிருந்தது.
சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, 59, மாநிலத்தின் 18வது முதல்வராக பொறுப்பு ஏற்க இருந்தார்.
இம்மூன்று கட்சிகளையும் சேர்ந்த மொத்தம் ஆறு பேர் நேற்று பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்ள இருந்ததாக தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் அஜித் பவார் தெரிவித்து இருந்தார். ஆனால் தான் இப்போது பதவி ஏற்கப்போவதில்லை என்றார் அவர்.
பதவி ஏற்பு நிகழ்ச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட இந்தியாவின் எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் கலந்துகொண்டார்கள். பிரதமர் மோடிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
இதனிடையே, பாஜகவை ஓரங்கட்டிவிட்டு சிவசேனா தலைமையில் ஆட்சி அமைவதற்குத் தேசியவாத காங்கிரசின் பிதாமகனாகக் கருதப்படும் சரத் பவாரே காரணம் என்றும் அவர்தான் தனக்கு வழிகாட்டி என்றும் நேற்று சிவசேனா புகழாரம் சூட்டியது.
மாநிலத்தில் சுதந்திரம் கிடைத் தது போன்ற மகிழ்ச்சி நிலவுவதாகவும் சிவசேனா குறிப்பிட்டது.
இந்துத்துவா, தேசியவாதக் கொள்கைகளை முன்னெடுத்து சிவசேனா அரசியல் நடத்துகிறது.
அதேவேளையில், மதச்சார்பின்மையை முன்வைத்து தேசியவாத காங்கிரஸ் கட்சியும் காங்கிரஸ் கட்சியும் அரசியல் நடத்துகின்றன.
இந்த மூன்று கட்சிகளும் சேர்ந்து ‘மகா விகாஸ் அகாதி’ என்ற கூட்டணியை அமைத்துள்ளன. இந்த மூன்று கட்சிகளில் ஒவ்வொன்றுக்கும் 60 பேருக்கும் குறைந்த எம்எல்ஏக்களே உள்ளனர்.
இதனிடையே, பிரதமர் மோடியும் அமித் ஷாவும் மகாராஷ்டிராவில் ஜனநாயகத்தின் சக்தியை, அதிகாரத்தைக் குறைத்து மதிப்பிட முயன்று இருக்கிறார்கள் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குறைகூறினார்.
காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் கலந்துகொண்ட அவர், மகாராஷ்டிர ஆளுநர் கண்டனத்துக்குரிய முறையில் நடந்துகொண்டு பாஜகவை ஆட்சி அமைக்க அனுமதித்தார் என்று சாடினார்.